மஸ்கெலியாவில் 27 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்! மஸ்கெலியா வைத்திய அதிகாரியின் வேண்டுகோள்

Report Print Gokulan Gokulan in சமூகம்
60Shares

மஸ்கெலியாவில் 27 கொரோனா தொற்றாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி துரைசாமிபிள்ளை சந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியா பிரதேசம் மிக அபாயமான பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தருவோர், வருகையை குறைத்து கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

மஸ்கெலியா சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில் 23ஆம் திகதி மட்டும் புதிதாக ஏழு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் நால்வர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கடந்த 10 நாட்களுக்கு முன் குறித்த குடும்பத்தினரைச் சேர்ந்த ஒருவர் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்தார்.

அவருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியான பின்னணியில் அவரது குடும்பத்தினருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. ஏனைய இருவரும் கொழும்பிலிருந்து வந்தவர்களாவர்.

மேலும் தீபாவளி பண்டிகை காலத்தில் கொழும்பு பகுதிகளிலுள்ளவர்கள் மஸ்கெலியா பிரதேசத்திற்கு வர வேண்டாம் என அறிவித்திருந்தேன். ஆனாலும் அதிகளவானோர் வருகை தந்துள்ளனர்.

அவ்வாறு வந்தவர்களுக்கு மேற்கொள்ளும் பி.சி.ஆர் பரிசோதனையிலே தொற்றுகள் அடையாளம் காணப்படுகிறது. இது வரையில் மொத்தமாக 27 கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மஸ்கெலியா மற்றும் அம்பகமுவ சுகாதாரப் பிரிவுகளில் வெளியிடங்களிலிருந்து வந்த அனைவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேபோல பரிசோதனை நடவடிக்கைளை மேற்கொள்ளத் தேவையான வசதிகள் காணப்படுவதானால் எங்களுடைய சேவையை முன்னெடுக்க கூடியதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிப் பிரத்தேசத்தவர்கள் முடியுமானவரை மஸ்கெலியா பிரதேசத்திற்கு வருவதை தவிர்க்குமாறு வைத்திய அதிகாரி சந்திரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.