முல்லைத்தீவில் மீளவும் இயங்கும் தனிமைப்படுத்தல் நிலையங்கள்! இதுவரை 6 பேருக்கு கொரோனா உறுதி

Report Print Rakesh in சமூகம்
28Shares

முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் மீண்டும் கொரோனா தொற்று என சந்தேகிக்கப்படுகின்றவர்கள் கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தல் செயல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு விமானப்படைத்தளம், கேப்பாப்பிலவு 59ஆவது படைப்பிரிவின் இராணுவப் பயிற்சி பாடசாலை, புதுக்குடியிருப்பு திம்பிலி 68 ஆவது படைப்பிரிவின் இராணுவப் பயிற்சி பாடசாலை ஆகிய 3 தனிமைப்படுத்தல் நிலையங்கள் இயங்கி வந்த நிலையில் அவை, வீடுகளிலேயே தனிமைப்படுத்தல் செயற்திட்டங்கள் இடம்பெறும் என்ற இராணுவத் தளபதியின் அறிவிப்பைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து விமானப்படையுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்துகின்ற நோக்கத்தோடு கடந்த 21ஆம், 22ஆம் திகதிகளில் கேப்பாப்பிலவில் விமானப்படைத் தளத்தில் விமானப்படையுடன் தொடர்புடையவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் 145 பேர் கொண்டுவந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்களில் ஒரு தொகுதியினருக்கு நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் அடிப்படையில் இருவருக்குத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவர்கள் கொரோனா சிகிச்சை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

இன்னும் ஒரு தொகுதியினருக்கான பி.சி.ஆர். பரிசோதனைகள் நேற்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த நபர்களில் நான்கு பேர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இருப்பது அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்கள் மருதங்கேணி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த மற்றுமொரு தனிமைப்படுத்தல் நிலையமான 59ஆவது படைப்பிரிவின் இராணுவப் பயிற்சி பாடசாலைக்கு டுபாயிலிருந்து நாடு திரும்பிய 17 பேர் இன்று அதிகாலை ஒரு மணியளவில் கொண்டுவரப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டு வருகிறதோடு இதுவரை தனிமைப்படுத்த நிலையங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்ட 6 பேருக்குத் தொற்று அடையாளம் காணப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.