பொகவந்தலாவ பகுதியில் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான விசேட கோரிக்கை..

Report Print Thirumal Thirumal in சமூகம்
176Shares

பொகவந்தலாவ சுகாதா வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் கொட்டியாகலை கீழ் பிரிவு, டிக்கோயா டில்லரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர் தோட்டம், பொகவந்தலாவ செல்வகந்தை தோட்டம், பொகவந்தலாவ பொகவான தோட்டம், பொகவந்தலாவ மோரார் ஆகிய தோட்டங்களை சேர்ந்த 52,32,21,26 வயதுடையவர்கள் என்றும் இவர்களை கொரோனா சிகிச்சை முகாம்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

தொற்றுக்குள்ளான மேற்படி ஆறு பேரும் கொழும்பு புறக்கோட்டை, புளுமென்டல், பம்பலப்பிட்டி போன்ற பகுதிகளிலிருந்து கடந்த 17ம் திகதி தமது வீடுகளுக்கு வருகை தந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு வருகை தந்தவர்களிடம் கடந்த 24 ம் திகதி எழுமாறாக தெரிவு செய்யப்பட்ட 46 பேரிடம் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை நேற்று வெளியானதனை தொடர்ந்து இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே குறித்த பகுதியிலுள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டாம் என ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களிடம் நெருக்கமான உறவு வைத்திருந்த குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை பொகவந்தலாவையில் உள்ள பாசாலைகளில் மிகவும் குறைந்தளவு மாணவர்களே வருகை தந்துள்ளதாகவும் ஒரு பாடசாலை மாணவர்கள் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.