சங்கரின் சாவுக்கு திகதி குறிக்கப்பட்டுவிட்டதையும், அது புதிய சரித்திரம் ஒன்றை படைக்கப்போவதை அறியாமல் தான் 1982ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் யாழ்பாணத்தின் காலை விடிந்தது என தொல்லியற்துறை மாணவன் திபாகரன் எழுதியுள்ள வரலாற்றின் பதிவுகள் ஆவணத்தொகுப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
1982ல் சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவப்பொருட்களை வணக்கத்துக்குரிய பிதா சிங்கராயர் அவர்கள்தான் கொள்வனவு செய்திருந்தார்.
அவரது ஆச்சிரமத்தை எதிர்பாராதவிதமாக சோதனையிட்டபோது பொலிஸாரிடம் அம்மருந்துப் பொருட்களுக்கான பற்றுச்சிட்டைக்கள் அகப்பட்டுவிட்டன.
அதனால் கைதாகிய பிதா சிங்கராயர் கொடுமையான விசாரணயின் போது உண்மைகளைச் சொல்லிவிட்டார்.
போராளிகளுக்கு சிகிச்சையளித்த அருட்சகோதரரும், வைத்தியருமான இரட்டையர்கள் சின்னராசா, குருகுலராசா ஆகிய இருவரும் கைதாகினர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட கடுமையான விசாரணையின் போது யாழ். பல்கலைக்கழக பொருளியல் விரிவுரையாளர் ச.நித்தியானந்தன் வீட்டில் சிகிச்சையளிப்பட்மை தெரியவந்துள்ளது. உடனே அவர் வீட்டை நோக்கிப் படையினர் பாய்ந்தனர்.
அன்று நல்லுரில் நாவலர் வீதியும், டக்கா வீதியும் சந்திக்கும் சந்தி மூலையிலுள்ள பொருளியல் விரிவுரையாளர் ச.நித்தியானந்தன் வீட்டில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதலில் காயமடைந்த சீலன் உள்ளிட்ட நான்கு போராளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வெளியேறும் போது மகிழ்ச்சியின் நிமித்தம் புலி வீரர்களுக்கு விருந்துபசாரம் நிகழ்ந்துள்ளது.
போராளிகள் இருவர் இருவராக சென்று உணவருந்திவிட்டு திரும்பிவிட்டனர். மாலை 3:30 மணியளவில் இறுதியாக அங்கு சென்ற லெப்.சங்கர் வீட்டினுள்ளே விரிவுரையாளருடன் உணவருந்திக் கொண்டிருந்தார்.
அவ்வேளை வீட்டனுள் சிங்களப்படை திடீரென தேடுதல் வேட்டைக்காக புகுந்துள்ளனர். உடனே சங்கர் வீட்டின் பின்புறமாக ஓடிச்சென்று கிலுவை வேலியை வேகமாக பாய்ந்து தாண்டும்போது இராணுவத்தின் துப்பாக்கி ரவை ஒன்று சங்கரின் அடிவயிற்றுப் பகுதியில் படுகாயப்படுத்தியது.
இரத்தம் பீறிட்டுக்கொண்டிருக்க டக்கா வீதியில் குதித்து ஓடிக்கொண்டிருந்த சங்கரை அவ்வீதியால் மிதிவண்டியில் வந்துகொண்டிருந்த ஈரோஸ் இயக்க உறுப்பினரும், பல்கலைக்கழக மாணவருமான செல்வின் தனது கரங்களால் தாங்கிப்படித்து மிதிவண்டியில் ஏற்றிக்கொண்டு வேகமாக திருநெல்வேலியில் உள்ள போராளிகளின் மறைமுக முகாம் நோக்கி விரைந்தார். மாலை 4 மணிக்கு குமாரசாமி வீதி 41ம் இலக்க மறைமுக முகாம் வீட்டில் பாதுகாப்பாக சங்கர் சேர்க்கப்பட்டார்.
மாலைநேரம் போராளிகளும், ஆதரவாளர்களும் விரைவாக தொழிற்பட தொடங்கினர். மருத்துவர் கெங்காதனிடம் அவசர உதவி கோரப்பட்டது. அன்றைய பதற்ற நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முடியாது.
ஆகையால் தனியிடத்தில் சிகிச்சையளிக்க மருத்துவர் இசைந்ததற்கிணங்க தீவிர ஆதரவாளரும், பல்கலைக்கழக மாணவருமான ஜெயரெட்டி தனது காரில் ஏற்றிக்கொண்டு செல்ல சங்கருக்கு தனியிடத்தில் சிகிச்சையளிக்கப்பட்டது.
ஆனால் உள்ளக இரத்தக்கசிவுக்கு யாழ்பாணத்தில் வைத்து சிகிச்சையளிப்பது பாதுகாப்பற்றது என்பதை காரணம் காட்டி தமிழகம் கொண்டு செல்லும்படி மருத்துவர் ஆலோசனை வழங்கினார். அன்றிரவு சங்கர் கொக்குவில் அம்பட்டப்பலத்தடியில் உள்ள ஒரு வீட்டில் (ரவிசேகரின் அறையில்) பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டார்.
ஐந்து நாட்களாக தமிழக படகுப்பயணம் பல்வேறு தடைகளால் தாமதப்பட்டு நவம்பர் 26 இரவு தமிழகம் நோக்கி பயணப்பட்டார். சங்கரை மேலதிக சிகிச்சைக்காக தமிழகம் கொண்டு செல்ல அன்று இயக்கத்திலிருந்து விலகியிருந்த அன்ரன் சிவா (சிவகுமார் தற்போது கனடாவில்) நியமிக்கப்பட்டார்.
27ம் நாள் அதிகாலை தமிழக கரையினை அடைந்த சங்கரை இயக்க ஆதரவாளாரான மூதாட்டி ஒருவரின் வீட்டில் தங்க வைத்துவிட்டு அன்ரன் சிவா, தலைவரை சந்திக்க மதுரைக்குச் சென்று தகவல் சொல்லி மதுரையில் இருந்து போராளிகள் வாகனம் ஒன்றை கொண்டு சென்று சங்கரை தனியார் வைத்தியசாலை ஒன்றில் இரகசியமாக அனுமதித்தனர்.
எனினும் ஏற்கனவே மூதாட்டி வீட்டில் படுகாயத்தின் வேதனையில் முனகிக்கொண்டிருந்த சங்கர் தாகம் மேலிட தண்ணீர் கேட்க மூதாட்டி கோப்பி தயாரித்து வழங்கியுள்ளார்.
கோப்பி அருந்தியதும் ஒவ்வாமையால் விரைவான உள்ளக இரத்தப்பெருக்கு ஏற்பட்டு சுயநினைவை இழந்த சங்கர், தம்பி தம்பி என தலைவரை நெடுநேரம் அழைத்துக் கொண்டே மாலை 6:05க்கு தமிழகத்தின் மதுரை மண்ணில் அவர் மூச்சு நின்று போனது.
அன்றைய காலச்சூழலில் சங்கரின் வித்துடலை பூரண மரியாதைகளுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று தகனம் செய்ய முடியாது.
எனவே சங்கரை தமிழ்நாட்டின் திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும், நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார் எனவும், அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு நிதிவசதி இல்லையெனவும் கூறி, மரணச்சான்றிதழ் ஒன்றினைப் பெற்று அந்த தனியார் மருத்துவமனையிலிருந்து இரவுநேரம் எடுத்துச்சென்று மதுரையிலுள்ள ஒரு சுடுகாட்டில் மூத்த போராளிகளான பேபி, பொன்னம்மான், தேவர், கிட்டு மற்றும் நெடுமாறன் ஐயாவும் அவரின் கட்சித் தொண்டர்கள் சிலரோடும் சென்று அப்பையா அண்ணர் சங்கரது உடலுக்குத் தீ மூட்டினார்.
பின் அஸ்தியை சேகரித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டு, மறுவருடம்தான் சங்கரது மரணச்செய்தி பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு அஸ்தியும் கையளிக்கப்பட்டுள்ளது.
அன்றிலிருந்து மாவீரர் விதைப்பு உதயமாகியது. இன்று அந்த நவம்பர் 27 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் குறியீட்டு நாளாய் பரிமாணமித்திருக்கிறது. சங்கரின் அடிச்சுவட்டை பின்பற்றி நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட தேசத்தின் புதல்வர்கள் தாயக விடிவிற்காக தம்மை ஆகுதியாக்கி விடுதலைப் போருக்கு உரமாயினர்.
இம்மாவீரர்கள் தம் இளமைக்காலத்தை துறந்தவர்கள், பணம், பதவி, பட்டம், புகழ், ஆசைகளை புறந்தள்ளியவர்கள், இலட்சிய வேட்கையேடு நெருப்பாற்றில் நீந்தியவர்கள், சொல்லணாத்துன்பங்களை தோளில் சுமந்து தமிழ் மக்களுக்கு ஒளியூட்டியவர்கள், எதற்கும் விலைபோகதவர்கள், அவர்கள் விலைமதிப்பற்றவர்கள், தமிழீழ மக்களின் விடுதலைக் கனவையும் நெஞ்சில் சுமந்து களமாடியவர்கள் இத்தகைய மாவீரர்களின் கனவு சுமந்து நாம் தொடர்ந்து போராடுவோம் என இந்நாளில் தமிழிழ மக்கள் உறுதிகொள்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
You My Like This Video