ஷங்கரி-லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரி குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம்

Report Print Ajith Ajith in சமூகம்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின்போது தங்களை தாங்களே வெடித்து நடத்தப்பட்ட தாக்குதலில் பங்கேற்றவர்கள் மத்தியில் ஷங்கரி-லா விருந்தகத்தில் தாக்குதல் நடத்திய இரண்டாவது தற்கொலை குண்டுதாரி தாக்குதலுக்கு முன்னர் அமையதியான மனநிலையைக் கொண்டிருந்தார் என்று சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

சீசீடிவி காணொளி காட்சிகளின் அடிப்படையில் இல்ஹாம் அகமது இப்ராஹிம் என்ற இந்த தாக்குதல்தாரி குண்டுவெடிப்பின் போது அமைதியான மனநிலையைக் கொண்டிருந்தார் என்று சிரேஸ்ட மனநல மருத்துவர் வைத்திய கலாநிதி நீல் பெர்னாண்டோ, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று தெரிவித்துள்ளார்.

ஷங்கரி-லா விருந்தகத்தில் உள்ள உணவகத்தில் சஹ்ரான் ஹாஷிம் தன்னைத் தானே வெடித்து தாக்குதல் நடத்திய சில நிமிடங்களுக்குப் பிறகு இல்ஹாம் இந்த தாக்குதலை நடத்துவதை காணமுடிகிறது

அந்த நேரத்தில் தனது சக தற்கொலைதாரி உயிருடன் இல்லை என்பதை இலஹாம் அறிந்திருந்தார். எனினும் அந்த சூழ்நிலையில் கூட, இல்ஹாம் தனது இலக்கை நோக்கி அதிக கவனம் செலுத்தினார்.

அத்துடன் விருந்தனர்கள், விருந்தகத்தில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும்போது அவர் மின்தூக்கி (லிப்ட்) அருகே சென்று தற்கொலை தாக்குதலை நடத்தினார் என்று சாட்சி தெரிவித்தார்.

இதேவேளை தெமட்டக்கொடை இல்லத்தில் வைத்து இல்ஹாம் அகமதுவின் மனைவி பாத்திமா ஜிஃப்ரி நடத்திய குண்டுவெடிப்பு தொடர்பாகவும் சாட்சி தகவல் வழங்கினார்.

அந்த சூழ்நிலையிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை அறிந்திருந்ததால், இல்ஹாமின் மனைவி பாத்திமா ஜிஃப்ரிக்கு நம்பிக்கையற்ற சூழ்நிலை இருந்திருக்க வேண்டும். எனவே அவர் தனது குழந்தைகளுடன் தன்னைத் தானே வெடிக்கச்செய்திருக்க வேண்டும் என்று சாட்சி குறிப்பிட்டார்.

இதனை தவிர இல்ஹாமின் மனைவியினது நிலைமையை மேலும் பகுப்பாய்வு செய்ய வேண்டுமானால், ஒரு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சாட்சி தெரிவித்தார்.

இது தற்கொலை சம்பவம் குறித்த ஆராய்ச்சியின் மிகவும் மதிப்புமிக்க பகுதியாகும். இதன்போது இறந்தவரின் கிடைக்கக்கூடிய அனைத்து தகவல்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நேர்காணல்கள், தொலைபேசி பதிவுகள் மூலமாகவும் கிடைக்கும் தகவல்களை சேகரிப்பதை உள்ளடக்குகிறது என்று சாட்சி தெரிவித்தார்.