வடக்கிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அச்சமின்றி சிகிச்சை பெற வர முடியும்: வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு

Report Print Rakesh in சமூகம்
54Shares

வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்குப் பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு வர முடியும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் கிளிநொச்சியில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இனங்காணப்பட்ட வயோதிபர் ஒருவர், கடும் காய்ச்சலுடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்படும் போது போதிய பாதுகாப்பு நடவடிக்கையுடனேயே சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தார்.

இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரோடு நேரடித் தொடர்பில் இருந்த மூன்று மருத்துவப் பணியாளர்கள் தனிமைப்படுத்தலுக்கும், மேலும் 7 மருத்துவப் பணியாளர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அவருடன் நேரடியாகத் தொடர்புடைய உறவினர்களும், நோயாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

எனவே,வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்குவர முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.