யாழில் வீதி திருத்தப் பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவருக்கு கொரோனா

Report Print Sumi in சமூகம்

வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வீதி திருத்தப் பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனத்தை சேர்ந்த பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கெக்கிராவையைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

குறித்த நபர் கொவிட் - 19 சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படுகிறார். வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 200 பேரிடம் எழுமாறாக எடுக்கப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதில் வேலணை புளியங்கூடல் வீதித் திருத்தப் பணிக்காக வருகை தந்த தென்னிலங்கையை சேர்ந்த சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களும் அடங்கியிருந்தனர்.

இந்த நிலையில் வீதி திருத்தப் பணியில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய 199 பேருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.

இதேவேளை, புளியங்கூடல் பகுதியில் 2 வர்த்தக நிலையங்கள் சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தலில் இன்று காலை மூடப்பட்டுள்ளன.

அத்துடன், இன்று காலை 9 மணிவரை 10 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.