வலி.மேற்கு காரைநகர் பிரதேசங்களில் நூற்றுக்கணக்கானோர் தனிமைப்படுத்தல்!

Report Print Sumi in சமூகம்
96Shares

காரைநகரில் தொற்று உறுதி செய்யப்பட்ட கொரோனா நோயாளியுடன் பழகியவர்கள், அவர்கள் சென்று வந்த இடங்கள் என்ற அடிப்படையில் நூற்றுக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் மிகவும் விழிப்பாக இருந்து சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு சுகாதாரப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக, காரைநகர் மற்றும் வலி.மேற்கு பிரதேசம் உட்பட யாழ். மாவட்ட மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறும், அவசிய தேவைக்கு மாத்திரமின்றி தேவையற்று வெளியே செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காரைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை வழங்கிய மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை மூடப்பட்டு வைத்தியசாலை பணியாளர்கள் 36 பேர் அவர்களின் குடும்பங்களுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் எவரையும் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும், இவர்களின் வீடுகளுக்கு எவரும் செல்ல வேண்டாம் எனவும் சுகாதாரப் பிரிவு இறுக்கமாக அறிவுறுத்தியுள்ளது.

காரைநகரைச் சேர்ந்த கொரோனா நோயாளி மீன் சந்தைக்கு சென்றிருந்தார் என்பதால் சங்கானை, பொன்னாலைச் சந்தி மீன் சந்தைகள், மூளாய் மரக்கறி, மீன் சந்தை என்பனவும் மூடப்பட்டுள்ளன. இச்சந்தைகளுடன் தொடர்புடைய 40 பேர் வரையானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த நோயாளி மது அருந்துவதற்கு சென்றார் என்பதால் காரைநகரில் உள்ள கள்ளுத் தவறணைகள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளன. சங்கானை மதுபானசாலைக்கும் இவர் சென்றதால் குறித்த மதுபானசாலையும் பூட்டப்பட்டு 04 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காரைநகரில் வலந்தலை சந்தி தொடக்கம் ஆலடி வரையான கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளன. காரைநகரில் 25 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன எனவும் காரைநகர் பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இதேவேளை, மேற்படி கொரோனா நோயாளி திருநெல்வேலி பிரபல தனியார் வைத்தியசாலை, ஓட்டுமடம் - அராலி வீதியில் உள்ள கராஜ், யாழ்.பஸ்தரிப்பு நிலையம், யாழ்.நகர மின்சார வீதியில் உள்ள புடவைக்கடை போன்ற பல இடங்களுக்கு சென்றுள்ளார்.

இதனால் யாழ். மாவட்டத்திற்கே கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த விடயத்தில் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

சங்கானை, காரைநகர், யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் இவ்விடயத்தில் அதிக கரிசனை எடுத்துள்ளனர்.

குறிப்பாக, பொன்னாலை, மூளாய், காரைநகர், சங்கானை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உட்பட வலி.மேற்கில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் இப்பணியில் இணைந்து கொண்டுள்ளனர்.

எனவே, யாழ். மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவதன் மூலம் நோய்த்தொற்றில் இருந்து தங்களையும், மற்றவர்களையும் பாதுகாப்பதற்கு உதவுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.