யாழ். பல்கலையில் ஏற்பட்ட பதற்றம்! மாணவனின் கைதில் திடீர் திருப்பம்..

Report Print Banu in சமூகம்
2199Shares

புதிய இணைப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் மசகையா தர்ஷிகன் என்பவரே இவ்வாறு இன்றிரவு 7.45 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

இரண்டாம் இணைப்பு..

கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவனை துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா, கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு மாணவனை உடனடியாக விடுதலை செய்யுமாறு கேட்டுள்ளார்.

இந்நிலையில் பொலிஸ் சம்பிரதாயங்களை முடித்த பின்னர் மாணவனை விடுதலை செய்வதற்குக் கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இணங்கியிருப்பதாக அறிய முடிகின்றது.

முதலாம் இணைப்பு.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை ஆறு மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர்.

இதனையறிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்குச் சென்று தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு அறிவுறுத்திய பொலிஸார், தமது அறிவுறுத்தலை மீறி தீபங்கள் ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளதுடன், இரண்டாம் வருட மருத்துவ பீட மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.