மன்னார் மாவட்டத்தில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்! மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

Report Print Ashik in சமூகம்
160Shares

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களின் 3 பேர் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள சவேரியார் புரத்தில் மீன் வாடி அமைத்து கடற்தொழிலில் ஈடுபடச் சிலாபத்திலிருந்து வந்தவர்கள்.

இவர்கள் கடந்த 19ஆம் திகதி சிலாபத்திலிருந்து வருகை தந்து வரையறுக்கப்பட்ட நகர்வு என்ற அடிப்படையில் தமது தொழில் நடவடிக்கைகளுக்கு மாத்திரம் கடலுக்குச் செல்லவும், சமூகத்திற்குள் செல்லாமல் இருக்கவும் அனுமதிக்கப்பட்டு கடற்தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

வருகை தந்தவர்களில் 6 பேருக்கு பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 3 நபர்களுக்குத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களுடன் தொடர்பிலிருந்து அடிப்படை உதவிகளை மேற்கொண்ட 15 உள்ளூர் வாசிகள் உள்ளடங்கலாக 18 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நான்காவது தொற்று உடையவர் இரணை இலுப்பைக்குளம் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 21ஆம் திகதி, கொழும்பிலிருந்து வவுனியாவிற்குப் பேருந்து மூலம் வருகை தந்து வவுனியாவிலிருந்து முச்சக்கரவண்டியூடாக மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரணை இலுப்பைக்குளம் பகுதிக்கு வருகை தந்துள்ளார்.

இவரும் தனிமைப்படுத்தப்பட்டுக் கடந்த 26ஆம் திகதி பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவருடன் தொடர்பிலிருந்த 5 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் 1286 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுக் குறித்த 4 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரையில் மன்னார் மாவட்டத்தில் 3423 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 16 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களின் இருவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஒருவர் அனுராதபுரத்தை சேர்ந்தவர்களாகவும், ஏனைய 13 பேரும் புத்தளம் மாவட்டத்தை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.

தற்போது தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 4 பேரும் கிளிநொச்சியில் அமைந்துள்ள வடமாகாண தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இவர்கள் சிகிச்சை முடிவடைந்து டிசம்பர் மாதம் 10ஆம் திகதியளவில் வீடுகளுக்குத் திரும்புவார்கள்.

மீனவ சமூகத்தில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மீன்களைச் சமைக்கும் போது சுடு நீரில் கழுவி மீனை உபயோகித்த கைகளைத் தொற்று நீக்கிகள் மூலம் கழுவுவதன் மூலம் மீன்களினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய தொற்றுக்களை நாங்கள் தவிர்த்துக் கொள்ள முடியும்.

மீன்களை உண்ணக்கூடாது என நினைத்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.