ஓட்டமாவடியில் டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

Report Print Navoj in சமூகம்
18Shares

ஓட்டமாவடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் அதிகரித்து வரும் டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் அரச திணைக்களங்களுடன் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலுள்ள அரச திணைக்களங்களில் கடமையாற்றும் அரச அதிகாரிகள் ஊடாக டெங்கை கட்டுப்படுத்தும் நோக்கில் விளக்கமளிக்கும் கருத்தரங்கு அலுவலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

ஓட்டமாவடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அதிகாரிகள், பட்டதாரி பயிலுனர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கிழக்கு பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளரும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்திய நிபுணருமான விஜி திருக்குமரன் கலந்து கொண்டு சிறுவர்களை டெங்கு நோயிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில் விளக்கமளித்தார்.

இதில் டெங்கு பரவலைத் தடுப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள், பின்பற்றப்பட வேண்டிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பொது மக்களுக்கு எவ்வாறு விழிப்பூட்டல்கள் வழங்குவது, டெங்கு நோய் காரணமாக அதிகம் பாதிக்கப்படும் சிறுவர்களை எவ்வாறு பாதுகாப்பது தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட விளக்கங்களை அதிகாரிகள் மக்களுக்குச் சென்றடையச் செய்யுமாறு வேண்டுகோள் வழங்கப்பட்டது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப்பிரிவில் டெங்கு நோயினால் 422 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார்.