கிளிநொச்சியில் இதுவரை 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

Report Print Yathu in சமூகம்
81Shares

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது வரைக்கம் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சைப் பெற்று வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தின் கொரோனா நிலவரம் தொடர்பான அவசர கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வாரம் சமூக தொற்று உடைய கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து அவருடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்துவது தொடர்பான செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தது.

இவ்விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்திலே நாம் பாடசாலைகளையும் ஒரு வாரம் நடத்தாமல் முடக்கி வைத்து இருந்தோம். இவற்றையும் நாம் மேற்கொண்டு செயல்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தோம்.

இதன் அடிப்படையில் எமது மாவட்டத்தில் 785 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 458 பேர்களுக்கான மாதிரிகள் பெறப்பட்டு அவர்களில் 13 பேர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்றைய தினம் வரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இன்றைய தினம் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது வரைக்கும் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.