வீட்டுத் திட்டங்களுக்கான முழுமையான நிதி வழங்கப்படவில்லை! பயனாளிகள் கவலை

Report Print Yathu in சமூகம்
48Shares

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த ஆட்சியின் போது வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகள் முழுமையாக வழங்கப்படாமையினால் பயனாளிகள் தமக்கான வீடுகளை முழுமைப்படுத்தமுடியாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் வீட்டுத்திட்டங்கள் கிடைக்கப்பெறாத குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு துணுக்காய், ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு கரைதுரைப்பற்று, வெலிஒயா ஆகிய ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா ஏழரை இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டு முதலாம் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட கொடுப்பனவுகளாக ஒரு இலட்சம் ரூபா, ஒன்றரை இலட்சம் ரூபா பகுதிக்கொடுப்பனவுகள் மாத்திரம் வழங்கப்பட்ட நிலையில் ஏனைய கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லை.

இவ்வாறு வீட்டுத்திட்ட பயனாளிகள் தமக்கான வீடுகளுக்குரிய கட்டுமானப்பணிகளை தொடங்கிய நிலையில் அவற்றை இடைநடுவில் கைவிட்டுள்ளனர்.

இதேவேளை ஒரு சில பயனாளிகள் வங்கிகளிலும், தனியார் நிறுவனங்களிடமும் கடன்களை பெற்று வீடுகளுக்கான கட்டுமான பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

இவ்வாறான பயனாளிகள் தமது வீடுகளை கட்டிமுடிக்க முடியாமலும், வீட்டுக்காக பெற்ற கடன்களை செலுத்த முடியாமலும் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,211 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு 2,211வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கென 1589 மில்லியன் ரூபா நிதி தேவையான நிலையில் 428 மில்லியன் ரூபா நிதி மாத்திரமே அப்போது விடுவிக்கப்பட்டதாகவும் ஏனைய நிதி விடுவிக்கப்டவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.