மருதமுனை வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவது தொடர்பில் கலந்துரையாடல்

Report Print Gokulan Gokulan in சமூகம்
40Shares

மருதமுனை வைத்தியசாலையை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் விசேட வைத்தியசாலையாக செயற்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிரதேச முக்கியஸ்தர்கள் குழுவொன்று நேற்று மாலை கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதில் மருதமுனையை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகரசபை உறுப்பினர்கள், உலமா சபை மற்றும் பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், பாடசாலைகள் மற்றும் அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர், கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், மருதமுனை வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் எம்.எம்.அஸ்மி,மருதமுனை வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பதிகாரி டாக்டர் எம்.எம்.மிஹ்லார் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது குறித்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன், வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின், பிரதேச மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்று உறுதியாகத் தெரிவித்துத் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதனால் எதிர்காலத்தில் இவ்வைத்தியசாலை பல்வேறு வசதிகளைப் பெற்று, முன்னேற்றமடைய வாய்ப்பிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் இது விடயமாகப் பிரதேச மக்களிடையே ஏற்பட்டிருக்கின்ற அச்சம், சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காக விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதென இக்கலந்துரையாடலின் இறுதியில் தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.