மிகிந்தலை மற்றும் ஓயாமடு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 8 கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதியாகி உள்ளதாக அனுராதபுரம் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் மருத்துவ அதிகாரி தேஜன சோமதிலக்க தெரிவித்துள்ளார்.
இந்த கடற்படையினருக்கு கடந்த 29 ஆம் திகதி நடத்தப்பட்ட PCR பரிசோதனைகளில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் கடமையாற்றி வந்த இந்த கடற்படையினர் மேற்கூறிய தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இதனிடையே தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு காய்கறிகளை விநியோகித்து வந்த எப்பாவளை கட்டியாவை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சோமதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
அடையாளம் காணப்பட்டுள்ள இந்த கொரோனா தொற்றாளர்கள் புணானையில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.