கிழக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று 235 ஆக அதிகரித்துள்ளதுடன், பி.சி.ஆர் பரிசோதனையில் அக்கரைப்பற்றில் இன்றுவரை 91 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

எனவே அக்கரைப்பற்று ஒரு உப கொத்தணியாக உருவாக வாய்பளிக்காதீர்கள் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளரை எமது பிராந்திய செய்தியாளர் இன்றைய தினம் தொடர்புகொண்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருகோணமலையில் சுகாதார பிராந்தியத்தில் 16 பேரும், அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 11 பேரும், மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் 88 பேரும், கல்முனை சுகாதர பிராந்தியத்தில் 120 பேர் உட்பட 235 பேருக்கு இன்று முதலாம் திகதி வரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் அக்கரைப்பற்று சந்தையில் தொடர்புபட்ட 91 பேருக்கு இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன், அம்பாறையில் 1361 பேரும், மட்டக்களப்பில் 5287 பேரும், திருகோணமலையில் 1249 பேரும், கல்முனையில் 2776 பேர் உட்பட கிழக்கு மாகாணத்தில் 10673 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருந்த போதும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் பி.சி.ஆர் பரிசோதனைகளில் இவற்றை அவதானிக்க முடிகின்றது. எனவே எதிர் காலத்தில் அங்கு ஒரு கொரோனா உப கொத்தணி உருவாகாமல் இருப்பதற்கு சுகாதார துறையினர், பொலிஸார், இராணுவத்தினர் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உட்பட சுகாதார அமைச்சு விடுத்துள்ள சுகாதார வழிமுறைகளை பேணுவதுடன், தேவையற்ற விதத்தில் வெளியில் நடமாடுவதை தவிர்த்து வீடுகளில் முடங்கியிருப்பதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.