மஹர சிறைச்சாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மருந்து வில்லைகள் தொடர்பாக விசேட மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்து வில்லைகளை பயன்படுத்திய காரணத்தினால், சிறைச்சாலையில் இருந்த கைதிகள் கோபத்துடன் நடந்துக்கொண்டனர் என வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து சரியான முடிவுக்கு வருவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக விசாரணைகளை நடத்தி வரும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக நேற்றைய தினம் 30 பேரிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் 13 பேர், 12 கைதிகள், சிறைச்சாலை மருத்துவர் மற்றும் 4 தாதிகளிடம் இந்த வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக 56 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட குழப்பத்தில் 11 கைதிகள் கொல்லப்பட்டதுடன் 108 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் இரண்டு பேர் சிறைச்சாலை அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.