மனச்சோர்வைப் பற்றி பேசுவோம்!

Report Print Murali Murali in சமூகம்
164Shares

மனச்சோர்வு என்ற சொல்லை நீங்கள் அநேகமான சந்தர்ப்பங்களில், பல்வேறு வகையில் பயன்படுத்தி இருப்பீர்கள். சில சமயம் ஒரு சூழ்நிலையை விபரிக்கவோ, எண்ணங்களை வெளிப்படுத்தவோ, உதாரணத்திற்கு "அந்த வேலைக் கூட்டம் ஒரே தலையிடியாக இருந்தது" அல்லது "அந்தப் படம் என்ன இவ்வளவு மனச்சோர்வாய் உள்ளதே" என்றெல்லாம் பொதுவாக மனச்சோர்வை எம் அன்றாட வாழ்வில் நாங்கள் தொடர்புபடுத்துகிறோம்.

சமீப காலமாக முற்சிந்தனை இன்றி வார்த்தைகளை விலாசும் பாங்கு எம்மிடத்தே அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும் பெரும்பாலும் நாங்கள் உண்மையிலே சொல்ல முற்பட்டது ஏதோ ஒன்றாகவும் இறுதியில் சொன்னது இன்னொன்றாகவும் இருந்திருக்கும்.

ஒருவன் சோகமாக பதட்டத்துடன் இருப்பதை மனச்சோர்வுடன் இருப்பதிலிருந்து வேறுபடுத்த முடியாமலிருப்பது அவனுக்கு மனச்சோர்வு போன்ற கடுமையான உளநலப் பிரச்சினைகள் இருக்கக் கூடும் என்பதை நாங்கள் புறக்கணித்தும், சோகம் போன்ற சாதாரண உணர்ச்சி நிலைகளை மிகைப்படுத்துவதனாலேயும் ஆகும்.

இவ்வாறு தான் எமது உணர்ச்சி நிலைகளை விபரிக்கும் போது மனச்சோர்வு என்ற சொல்லை அதிகமாகப் பயன்படுத்தும் வேளை, ஒரு பெரிய உளநலப் பிரச்சினையை (மனச்சோர்வு) எளிமைப்படுத்தும் வாய்ப்பை உருவாக்குகிறோம்.

ஆகவே, மனச்சோர்வு என்ற வார்த்தையின் தவறான பயன்பாட்டை குறைப்பது எவ்வாறு? சோகத்திற்கும் மனச்சோர்வுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொண்டு, எங்களை நாமே பயிற்றுவிப்பதே, பொதுவாக நம்மிடத்தே உள்ள இத் தவறான எண்ணத்தை மாற்றுவதற்கான முதல் படியாகும்.

கவலை என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு பாதகமான நிகழ்வு அல்லது அனுபவத்திற்கு, அந்த ஒருவர் வெளிப்படுத்தும் சாதாரண உணர்ச்சிபூர்வமான பதில். நண்பர்கள் அல்லது காதல் கூட்டாளர்களுடனான கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு சோகமாக இருப்பது, தேர்வில் சிறப்பாக செயல்பட முடியாமல் போனதுக்கு மனவருத்தப்படுவது மற்றும் வேலைத்தளத்தில் முதலாளியிடமிருந்து திட்டு வாங்கியதைப் பற்றி சிந்தப்பது; இவை அனைத்தும் சாதாரணமானவை.

வழக்கமாக இந்த உணர்ச்சிகள் சிறிது நேரம் கழித்து குறைவடையலாம் அல்லது எம்மைச் சூழவுள்ளோர் வழங்கும் ஊக்கவிப்பினால் இல்லாமல் ஆக்கப்படலாம். ஏன்? ஒரு மணி நேரம் முதல், இரண்டு நாட்கள் வரை கூட நீடிக்கலாம். மேலும், நாம் நம்பிக்கை கொண்டுள்ள ஒருவரிடம் சென்று அழுவதும், மன ஏக்கத்தை வெளிப்படுத்துவதும், எங்கள் அனுபவஙகளைப் பற்றி பேசுவதன் மூலமும் எம் சோகத்திலிருந்து எம்மால் தப்பித்துக் கொள்ள முடிகிறது.

மறுபுறம்; மனச்சோர்வு என்பது, ஒருவரின் உணர்ச்சி மற்றும் மன நலனை கடுமையாக பாதிக்கும் ஒரு மனநோயாகும். அதனை அனுபவிக்கும் நபருக்கு, அது கடுமையான எதிர்மறைச் சிந்தனைகளை ஏற்படுத்தி அவரது வாழ்க்கையின் அனைத்து அல்லது பெரும்பாலான அம்சங்களில் உணர்ச்சியற்ற சோகத்தை உணர வைக்கிறது. இந்நபர் ஒரு காலத்தில் விரும்பி ஊக்கத்துடன் செய்த காரியங்களை செய்வதற்கான உந்துதல் அற்றுப் போய், மேலும், எளிய கருமங்களைக் கூட நிறைவேற்ற அதிக அளவு ஆற்றலை எடுத்துக்கொள்கின்ற நிலை ஏற்படுகிறது.

சோகத்தைப் போலன்றி மனச்சோர்வு, பெரும்பாலும் தொடர்ந்து நிலைத்திருப்பதோடு மட்டுமல்லாது எப்போதும் குறித்தவொரு காரணத்தினால் மாத்திரம் தான் ஏற்படும் நிலையில்லாதும் காணப்படுகிறது. மனச்சோர்வைப் பற்றிய பொதுவான அனுமானம் என்னவென்றால், அது வந்தவுடன், அதை ‘ஒரு சொடுக்கில் விட்டு வெளியேறி விட முடியும்’ என்பது தான். இதுவே மனச்சோர்வு உண்மையில் ஒரு மன நோய் என்பதை சமூகங்கள் புரிந்து கொள்ள இயலாது போனதுக்கான அடிப்படைக் காரணம்.

மனச்சோர்வு என்பது பதற்றத்துடன் தொடர்புபட்ட ஒரு சிக்கலான மனநலப் பிரச்சினை ஆகும். உலக சுகாதார அமையம் மனச்சோர்வை, உலகளவில் இயலாமைக்குரிய முக்கிய காரணமாக அடையாளம் காட்டுகிறது. ஏறக்குறைய 300 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், உலகளவில் இந்த கோளாறால் பாதிக்கப்படுகின்றனர் என்று மதிப்பீடு செய்கிறது. குறிப்பாக தற்போதைய உலகளாவிய COVID 19 தொற்றின் பிரகாரம், இக் கோளாறின் அதிர்வெண் எல்லா இடங்களிலும் தவிர்க்க முடியாத அதிகரிப்பை கண்டு வருகிறது.

மனச்சோர்வுக்கு காரணம் ஒன்றல்ல, மாறாக மரபணு, உயிரியல், சூழல் மற்றும் உளவியல் காரணிகளின் கலவையே ஆகும். தீவிரமான எதிர்மறை அனுபவங்கள், ஒருவரின் சமாளிப்புத் திறனைக் குறைத்து அதன் மூலம் மனச்சோர்வைத் தூண்டும். இதனைத் தொடர்ந்து வரும் மனச்சோர்வு அத்தியாயங்கள் மேலும் தூண்டுதல்களின்றியும் கூட ஏற்படலாம்.

எப்பொழுதும் எதிர்மறையான வாழ்க்கை நிகழ்வுகள் நிகழுமிடத்து மனச்சோர்வு என்பது அவற்றின் தவிர்க்க முடியாத விளைவு என்று பரிந்துரைப்பது, முடியாத காரியம். ஆனால், ஒவ்வொரு தனிநபரின் மரபணுக்கள், உயிரியல், சுற்றுச்சூழல் மற்றும் உளவியல் ஆகியவற்றைப் பொறுத்தவொரு கீழ்நோக்கிய மனநிலை சுழற்சியால் மனச்சோர்வு அத்தியாயம் ஒன்றின் கதவைத் திறக்க முடியும்.

மனச்சோர்வின் அறிகுறிகள்

இந்த மனநலப் பிரச்சினை பின்வருவனவற்றில் பெரும்பாலானவற்றை உள்ளடக்கியது.

தொடரும் சோர்வு, சோக, கவலை அல்லது வெற்று மனநிலை.

நம்பிக்கையற்ற, குற்ற உணர்வுடைய, பயனற்ற தன்மை போன்ற உணர்வுகள்.

ஒரு காலத்தில் இன்பச் செயல்களில் காட்டிய ஆர்வம் அற்றுப்போதல்.

குறைந்தளவு ஆற்றல், சோம்பல், சோர்வு, குறைந்த சுய பராமரிப்பு (சுகாதாரம் போன்றவை).

அமைதியின்மை, எரிச்சல், கவனம் செலுத்துவதில் சிரமம், நினைவு வைத்திருப்பதில் சிரமம் மற்றும் நிச்சயமற்ற தன்மை.

உறக்கம் தொடர்பான பிரச்சினைகள்.

அதிகம் உண்ணுதல் அல்லது பசியின்மை.

கடுமையான சந்தர்ப்பங்களில் தற்கொலை பற்றிய எண்ணங்களும் பொதுவானவை.

செரிமான பிரச்சினைகள், தலைவலி மற்றும் நீடித்த வலி போன்ற உடல் அறிகுறிகள்.

ஒவ்வொரு தனிநபரின் மனச்சோர்வு அனுபவமும் வேறுபட்டது. சிலர் மேலே குறிப்பிட்ட அனைத்து அறிகுறிகளையும் கொண்டிருக்கலாம். வேறு சிலர், சிலவற்றை மாத்திரம் கொண்டிருக்கக் கூடும். இனங்கண்ட அறிகுறிகளின் எண்ணிக்கை மற்றும் அவ் அறிகுறிகளின் தீவிரத் தன்மை அடிப்படையில், மனச்சோர்வை எளிய, மிதமான மற்றும் கடுமையான கட்டங்களாக வகைப்படுத்தலாம்.

சிகிச்சை

மனச்சோர்வுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு சிறந்த அணுகுமுறை,

உளநல மருந்துகள் மற்றும் உளவியல் சிகிச்சையின் சேர்க்கையே ஆகும். பொதுவாக, Selective Serotonin Reuptake Inhibitors (SSRI’s) இதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மருந்தாகும்.

பெரும்பாலும் சிகிச்சை என குறிப்பிடப்படும் உளவியல் சிகிச்சையானது, மனநோய்களுக்கு மட்டுமல்லாது, பல்வேறுபட்ட மிடுக்கான பிரச்சினைகளுக்கும் உதவியாக அமைகின்றது. பெரிய வாழ்க்கை மாற்றங்கள், வாழ்க்கை அழுத்தங்கள், துக்கம், இலக்கை அடைய உதவி அல்லது மன நோய் தொடர்பான தீவிரமான மற்றும் தொடர்ச்சியான அறிகுறிகள் போன்ற காரணங்களுக்காக மக்கள் ஒரு உளநல சிகிச்சையாளரை நாடுகின்றார்கள்.

மனச்சோர்வுக்கான சிகிச்சையின் சிகிச்சை கூறு, சிந்தனை முறைகள் மற்றும் நடத்தை மாற்றங்களை சமாளிக்கிறது. மேலும், மருத்துவ அணுகுமுறை, அறிகுறிகளை மோசமாக்கும் சில உயிரியல் காரணங்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. இதனால், இந்த சேர்க்கை அணுகுமுறை, சில சிறந்த மீட்பு முடிவுகளைக் காட்டி இருக்கிறது.

எது சிறப்பாகச் செயல்படும் என்பது ஒவ்வொரு தனிநபரையும் பொறுத்தது. ஆனால் மிக முக்கியமான விடயம் என்னவென்றால், மனச்சோர்வின் மிகக் கடுமையான கட்டத்திற்கு கூட சிகிச்சையளிக்க முடிவதுடன், உடனடி உதவியை நாடுவதற்கும் சேவைகள் உள்ளன.

எனவே, நாம் நேசிக்கும் ஒருவர், மனச்சோர்வின் அறிகுறிகளைக் கொண்டிருந்தால், நம் நாட்டிலே கிடைக்கக்கூடிய ஆதாரங்களை அடையாளம் கண்டு, அவர்கள் உதவியை நாட வைக்க நாம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, மனநல உதவியை நாடுவது வெட்கப்பட வேண்டிய ஒரு செயலல்ல, மாறாக தம்மை மனச்சோர்விலிருந்து மீட்பதற்கான ஒரு துணிச்சலான முடிவாகும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். மேலும், இந்த விடயம் சார்பில் நாமும் பல விடயங்களைத் தேடி அறிய வேண்டும், ஏனெனில், இதன் மூலம் எம்மால் பாதிக்கப்பட்டோருக்கு இன்னும் சிறந்த வகையில் ஆதரவு வழங்க முடியும்.

இலங்கையில் உள்ள இலவச மனநல வளங்கள்:

1333 - நெருக்கடி தொடர்பு

1926 - தேசிய மனநல நெருக்கடி நிறுவனம்