கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள அனைத்து சிறை கைதிகளையும் மஹர சிறைச்சாலைக்கு இடமாற்றுவது தொடர்பாக தீர்மானம்

Report Print Ajith Ajith in சமூகம்
28Shares

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள அனைத்து சிறை கைதிகளையும் மஹர சிறைச்சாலைக்கு இடம் மாற்றுவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கான நடவடிக்கைகள் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மீளமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு துறை இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தெரிவித்திருக்கின்றார்.

இன்று அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் கொரோனா தொடர்பான தேசிய தடுப்பு நடவடிக்கை செயலகத்தின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவும் பங்கேற்றிருந்தார்.

இந்த கூட்டத்தின் தீர்மானத்தின் படி நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள அனைத்து கைதிகளையும் ஒரே இடத்திற்கு மாற்றுவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டு இருக்கின்றது.

அதற்கான சிறைச்சாலையாக மஹர சிறைச்சாலை அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இதனையடுத்து சிறைச்சாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் இராணுவத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தெரிவித்திருக்கின்றார்.

இதற்கிடையில் சிறிய குற்றங்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை சிறையில் இருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட உள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.

நாடளாவிய சிறைச்சாலைகளில் போதைவஸ்து தொடர்பான குற்றங்களுக்காக தண்டனை பெற்று வரும் சுமார் 8 ஆயிரம் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலைகள் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு துறை இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தெரிவித்திருக்கின்றார்.