கொரோனா தொற்று அபாயம் காரணமாக வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்படுத்தப்பட்ட நிலையில் கடல் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை விற்பனை செய்வது தொடர்பிலான சுகாதார விதிமுறைகள் தொடர்பிலான கூட்டம் இன்று வாழைச்சேனை ஹைறாத் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.அஷ்ரப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாழைச்சேனை மீன்பிடி துறைமுக முகாமையாளர் ஜோர்ஜ் றெஜினோல்ட் விஜிதரன், மீன்பிடி உத்தியோகத்தர்கள் எம்.இம்தியாஸ், ஹைறாத் டிரான்ஸ்போட் தலைவர் யூ.எல்.பசீர், மீனவ சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மீன்களை வெளி இடங்களுக்கு விற்பனை செய்வதற்கு கொண்டு செல்பவர்கள் மற்றும் வெளி பிரதேசத்தில் இருந்து மீன்களை கொள்வனவு செய்வதற்கு வாழைச்சேனை பிரதேசத்திற்கு வருகை தருவோர் தங்களின் பாதுகாப்பு கருதி சுகாதார நடைமுறைகளை பின்பற்றி விற்பனையில் ஈடுபட வேண்டும்.
விற்பனை செய்யும் மீனவர்கள் தங்களிடம் வெளி இடங்களில் இருந்து மீன்களை கொள்வனவு செய்பவர்களின் விபரங்களை வழங்க வேண்டும்.
வெளி இடங்களில் இருந்து மீன்களை கொள்வனவு செய்வதற்கு வருபவர்களினால் ஏதும் பாதிப்புக்கள் ஏற்படும் பட்சத்திலும், மீனவர்கள் செல்லும் இடங்களில் கொரோனா தொற்று இடம்பெறும் பட்சத்திலும் குறித்த நபரின் பிரதேசத்தினை மாத்திரம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி, ஏனைய பகுதிகளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் பாதுகாத்தல் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.