மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசசபையின் 34ஆவது சபை அமர்வு தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் சபா மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.
இதன்போது கடந்த மாதம் இடம்பெற்ற சபை அமர்வு அறிக்கை தவிசாளரினால் முன்வைக்கப்பட்டது. அதனை உப தவிசாளர் நா.தர்மலிங்கம் முன்மொழிய சபை உறுப்பினர் பொ. பரமானந்தராஜா வழிமொழிந்துள்ளார்.
உறுப்பினர் சு.விக்னேஸ்வரனால் கடந்த மாதம் இடம்பெற்ற கூட்டறிக்கையில் சில திருத்தங்கள் முன்வைக்கப்பட்ட போது அது சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கூட்டறிக்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சபை அமர்வில் உறுப்பினர் ம.சுகிதரனால், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட உரை தொடர்பிலும் அதன் மூலம் இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆதரவு குறித்தும் வாழ்த்து தெரிவித்ததுடன் இது தமிழ் சமூகத்திற்கும் கட்சிக்கும் உறுதுணையாக அமைந்துள்ளதாகவும் அதற்கு இந்த சபை அமர்வு சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
போரதீவுப்பற்று பிரதேசசபைக்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் இருந்து சின்னவத்தை வட்டார உறுப்பினராக தெரிவானவர் மாரடைப்பினால் இறந்துள்ளார்.
அந்த பதவிக்காக இன்று சபைக்கு திக்கோடை வட்டாரம் 38ஆம் கிராமம் நவகிரி நகர் ஆகிய கிராமத்திலிருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து போரதீவுப்பற்று பிரதேசசபை உறுப்பினராக நியமனம் பெற்றுள்ள கோ.வவிகரனுக்கு போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளரினால் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வேகமாகப் பரவிக் கொண்டு வரும் கொரனா தொற்றின் தாக்கத்திலிருந்து பிரதேச மக்களை பாதுகாக்கும் நோக்கோடு போரதீவுப்பற்று பிரதேசசபையினால் தொற்று நீக்கும் செயற்பாடுகள் தனிமைப்படுத்தி வைக்கப்படுகின்ற குடும்பங்களுக்கு குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாகவும் வெள்ளம், சூறாவளி ஆகிய அனத்தங்கள் இடம்பெறும் பிரதேசமாக போரதீவுப்பற்று பிரதேசம் காணப்படுவதனால் மக்களை பாதுகாக்கும் நோக்கோடு எமது பிரதேச சபையினால் அனர்த்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது சபை உறுப்பினர் பொ. பரமானந்தராஜா அவர்களினால் மண்டூர் கம்பி இறக்க பாலத்திலிருந்து ஆணை கட்டிய வெளிக்கு செல்லும் நான்கு கிலோமீற்றர் பிரதான வீதி வீதியானது கடந்த வெள்ளத்தின் போது சேதமடைந்து காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வீதியால் நோயாளர்காவு வண்டிகள் பயணம் செய்வதுடன் அதிகளவாக பொதுமக்கள் பயணிக்கும் வீதியாகவும் இது காணப்படுவதனால் இதனை திருத்தியமைக்க நடவடிக்கையெடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
குறித்த வீதியானது விவசாயி திணைக்களத்துக்கு உரிய வீதியாக காணப்படுவதன் காரணமாக இதுகுறித்து பலதடவை விவசாயத் திணைக்கள அதிகாரிகளிடம் பேசினோம்.
உங்களால் செய்ய முடியாவிட்டால் பிரதேசசபைவீதியாக மாற்றித்தருமாறு கூறினோம். அதற்கு எந்தவிதமான பதில்களும் இதுவரையில் வழங்கப்படவில்லையென தவிசாளர் ரஜனி இதன்போது தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் கவனத்திற்கு இது தொடர்பில் கொண்டு சென்றபோது மிக விரைவில் செய்து தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார் என தவிசாளர் கூறியுள்ளார்.
அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் அவற்றினை தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்தும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று போரதீவுப்பற்று பிரதேசசபையில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்றிட்டங்களுக்கும் இதன்போது சபை அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.