வைத்தியர் ஷிஹாப்தீன் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிலிருந்து நிதி பெற்றுக்கொண்டார்! ஆணைக்குழுவில் சாட்சியம்

Report Print Ajith Ajith in சமூகம்
124Shares

சிங்கள பெண்களுக்கு கருத்தடை சிகிச்சைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட குருநாகல் மருத்துவமனையின் முன்னாள் மருத்துவர் வைத்திய கலாநிதி ஷாஃபி ஷிஹாப்தீன் தடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிலிருந்து நிதி பெற்றுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாக சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளித்த குருநாகல் மாவட்ட முன்னாள் உதவி காவல் அதிபர் ஜயலத் இந்த சாட்சியத்தை வழங்கினார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர் குருநாகல் மாவட்டத்தில் இருந்து 226 பேர் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். உயிர்த்த தாக்குதல் தொடர்பான சந்தேகத்துக்குரியவர்களை கைது செய்வதற்கான தகவல்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டன.

இதனையடுத்து தாக்குதலின் பின்னர் 6 சந்தேகத்துக்குரியவர்களை காவல்துறையினரால் கைது செய்ய முடிந்தது என்றும் ஜயலத் தெரிவித்தார்.

தமக்கு கிடைத்த சுமார் 45 முக்கிய புலனாய்வு அறிக்கைகளின்படி ஒரு முக்கிய சந்தேகத்துக்குரியவரை கைது செய்ய தாம் நடவடிக்கை எடுத்ததாக சாட்சி குறிப்பிட்டார்.

எனினும் அவரை கைதுசெய்த பின்னர் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக தாம் புத்தளத்துக்கு இடமாற்றப்பட்டதாக சாட்சி தெரிவித்தார்.

இதன்போது யார் அந்த முக்கிய சந்தேகத்துக்குரியவர் என்று ஆணைக்குழுவினர் கேட்டபோது குருநாகல் மருத்துவமனையின் மருத்துவர் ஷாஃபி ஷிஹாப்தீனே அவர் என்று சாட்சி பதிலளித்தார்.

இதனையடுத்து அந்த மருத்துவருக்கு ஏதாவது அரசியல் தொடர்பு இருந்ததா என்று ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சாட்சி, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் அந்த மருத்துவர் தொடர்பு கொண்டிருந்தார் என்பது தெரிய வந்தது என்று குறிப்பிட்டார்.

குருநாகல் மாவட்டத்தில் உள்ள சஹ்ரான் ஹாஷிமின் மனைவியின் கிராமமான கெகுனகொல்ல கண்காணிப்பில் இருந்ததா என்று ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சாட்சியான ஜயலத், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னரே குருநாகல் பகுதியில் சஹ்ரானின் தொடர்பு பற்றி அறிந்துக்கொண்டதாக தெரிவித்தார்.

தாக்குதல்களுக்கு முன்னர் கெகுனகொல்ல பகுதி தொடர்பில் பயங்கரவாத புலனாய்வு பிரிவு, அல்லது குற்ற புலனாய்வுத் துறை எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் சாட்சி கூறினார்.