முல்லைத்தீவில் மீனவர்கள் பட்டினிச்சாவின் விளிம்பில்! அரசுக்கு எச்சரிக்கை

Report Print Theesan in சமூகம்
113Shares

முல்லைத்தீவு கடற்பரப்பில் அண்மைய நாட்களாக இடம்பெறும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக முல்லைத்தீவு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு முல்லைத்தீவு மீனவர்கள் பட்டினிசாவின் விளிம்புக்கு சென்றுள்ளதாகவும், உடனடியாக இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இதற்காக அரசுக்கு எதிர்வரும் 15 ம் திகதிவரை காலக்கெடு வழங்கியுள்ளதோடு,தீர்வில்லையேல் 15ம் திகதி மாபெரும் போராட்டம் முன்னெடுக்கவுள்ளதாகவும், இது தீர்வு கிடைக்கும் வரையான தொடர் போராட்டமாக இடம்பெறும் எனவும் ,போராட்டம் இடம்பெறும் சமவேளையில் மீனவர்கள் படகுகளில் சென்று இந்திய மீனவர்களில் இழுவைப்படகுகளை கரைக்கு கொண்டு வருவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் அண்மைய நாட்களாக இடம்பெறும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பாக விசேட அவசர கூட்டம் ஒன்று நேற்று கள்ளப்பாடு கிராமத்தில் இடம்பெற்றது.

இதில் மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள், மீனவர்கள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மீன்பிடி அமைச்சர் மீனவர்களை சென்று இந்திய படகுகளை கரைக்கு கொண்டு வருமாறும் அதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாகவும், தெரிவித்ததாக தெரிவித்து இன்று காலை மீனவர்கள் இணைந்து கடலுக்குச் சென்று இந்திய மீனவர்களை கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை சுமார் முப்பது படகுகளுடன் மீனவர்கள் முல்லைத்தீவு கடற்கரையில் ஒன்று கூடினர். இதன்போது சம்பவ இடத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வள துறை உதவிப்பணிப்பாளர், உத்தியோகத்தர்கள் வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த அதிகாரிகளிடம் மீனவர்கள் தமது நிலைமைகளை எடுத்துரைத்தனர். கடற்படையினர் வேடிக்கை பார்ப்பதாகவும் ,தமது வாழ்வாதாரம் இழந்து தாம் பட்டினிச்சாவை நோக்கி செல்வதாகவும், உங்களால் நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் சொல்லுங்கள் நாங்கள் சென்று அவர்களை கரைக்கு கொண்டு வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு அதிகாரிகள் மாவட்ட அரச அதிபர் தலைமையில் கடற்படையினரை அழைத்து கலந்துரையாடி ஒரு தீர்வை பெற்றுத்தருவதாகவும், அத்தோடு ஆளுநர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு உங்களுடைய கோரிக்கைகளை உடனடியாக கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அதிகாரிகளின் கருத்துக்கு மதிப்பளித்து எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் தமக்கு ஒரு தீர்வை பெற்றுத்தருமாறும் காலக்கெடு வழங்கியுள்ளதோடு, தீர்வில்லையேல் 15ம் திகதி மாபெரும் போராட்டம் முன்னெடுக்கவுள்ளதாகவும், இது தீர்வு கிடைக்கும் வரையான தொடர் போராட்டமாக இடம்பெறும் எனவும், போராட்டம் இடம்பெறும் சமவேளையில் மீனவர்கள் படகுகளில் சென்று இந்திய மீனவர்களில் இழுவைப்படகுகளை கரைக்கு கொண்டு வருவோம் எனவும் தெரிவித்து குறித்த இடத்திலிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

குறித்த இடத்தில் கருத்து தெரிவித்த இரண்டு கால்களையும் இழந்த மீனவர் ஒருவர்,

யுத்தம் ,சுனாமி என அனைத்தாலும் எமது உடைமைகள், சொத்துக்களை இழந்து மீன்பிடி தொழிலை செய்து வாழ்ந்து வருகின்றேன். இதற்கும் வழியில்லையேல் நான் சாவதை தவிர வேறு வழியில்லை. எனவே இந்திய எமது உறவுகளுக்கும், எமக்கும் சண்டைகளை உருவாக்காது அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,

தனது விடுதி கடற்கரையோரமாக இருப்பதாகவும், இந்த இந்திய மீனவர்களின் படகுகளின் செயற்பாடுகளை அவதானித்துள்ளதாகவும், மீனவர்களின் கோரிக்கைகள் நியாயமானது எனவும், குறித்த விடயத்தை அரச அதிபர் ஊடாக ஆளுநர், கடற்றொழில் அமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.