வவுனியா- கற்குழியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நகர பாடசாலைகள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த மாணவி வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் கல்விகற்று வருகின்றார்.
இவர் வேறு நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் அவருக்கு எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
குறித்த மாணவி கடந்த மூன்று மாதங்களாக பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என பாடசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.
எனினும் நேற்றைய தினம் பாடசாலைக்கு அவர் சென்று கல்வி செயற்பாடுகளில் பங்கெடுத்துள்ளார்.
இதன்போது இரண்டு வகுப்புகளை சேர்ந்த 35 மாணவர்களை ஒன்றாக இணைத்து நேற்றைய தினம் பாடம் எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் குறித்த மாணவிக்கு 12ஆசிரியர்கள் கற்பித்துள்ளனர். ஆசிரியர்கள் அனைவரும் சுய தனிமையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய விடயங்கள் தொடர்பாக சுகாதார பிரிவினர் ஆராய்ந்து வருகின்றனர்.