மன்னார் கடற்பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை

Report Print Ashik in சமூகம்
16Shares

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினால் மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

எனவே ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சமாச செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் சமாச கிராமிய அமைப்புக்களின் தலைவர்கள் இன்றைய தினம் காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் அவர்களிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறி இலங்கை கடல் பகுதிக்குள் நுழைவதால் மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரி மகஜர் கையளிக்கப்பட்டது.

இந்திய மீனவர்களின் வருகையினால் வட பகுதி மீனவர்கள் குறிப்பாக மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

அவர்களின் வருகையினால் எமது மீனவர்களின் வலைகள், படகுகள் தொடர்ந்தும் சேதத்திற்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றது. மேலும் கடல் வளங்கள் சூறையாடப்படுகின்றது.

எனவே குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக ஜனாதிபதி தலையிட்டு, இந்திய இழுவைப்படகுகளின் வருகையை நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்தெரிவித்தார்.