வவுனிக்குளத்தில் காணாமல் போன தந்தை, மகளின் சடலங்கள் மீட்பு

Report Print Theesan in சமூகம்
817Shares

முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் நேற்றையதினம் காணாமல் போன தந்தையும், மகளும் சடலமாக இன்று சுழியோடிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.

வவுனிக்குளம் குளக்கட்டில் பயணம் செய்து கொண்டிருந்த கப் ரக வாகனம் ஒன்று நேற்று மாலை குளத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

வாகனத்தில் குடும்பத் தலைவர் ஒருவரும் அவருடைய இரண்டு பிள்ளைகள் மற்றும் அயல் வீட்டை சேர்ந்த சிறுவன் உட்பட நால்வர் பயணம் செய்துள்ளனர்.

வாகனம் குளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான நிலையில், வாகனத்தில் பயணம் செய்த குறித்த குடும்பஸ்தரின் மகன் வாகனத்தில் இருந்து வெளியே வந்து குளத்தில் நீந்தி கரை சேர்ந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இராணுவத்தினர் பொதுமக்கள் இணைந்து வாகனத்தை குளத்தில் இருந்து மீட்டு எடுத்த போது வாகனத்தில் இருந்து சிறுவன் ஒருவன் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

ரவீந்திரகுமார் சஞ்சீவன் என்ற 13 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தை செலுத்தி சென்ற கிருஸ்ணபிள்ளை ரசீந்திரன் என்ற 37 வயதுடையவரும் அவரது மூன்று வயது மகளான ரசீந்திரன் சார்ஜனா ஆகியோரை தேடும் நடவடிக்கை தொடர்ந்த நிலையில், அதிகாலை 1 மணியளவில் கடற்படையினரின் சுழியோடிகளின் உதவியுடன் அவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சடலங்கள் மாங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.