யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 2,400 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன! அரச அதிபர்

Report Print Rakesh in சமூகம்
26Shares

யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட 2400 குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு அரசால் வழங்கப்படும் இடர்கால உதவி தொடர்பில் இன்று ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு அரசால் வழங்கப்படும் கொரோனா இடர் நிவாரண உதவியின் கீழ் 26 மில்லியன் ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் 2400 குடும்பங்களுக்கு இன்று வரை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிவாரணப் பணிகள் இரண்டு கட்டங்களாக, ஒரு குடும்பத்துக்குப் பத்தாயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் என வழங்கி வைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் விவரங்கள் பிரதேச செயலாளர் ஊடாக சேகரிக்கப்பட்டு மாவட்ட செயலகத்துக்கு அனுப்பப்பட்டன.

அவை மாவட்ட செயலகத்தின் ஊடாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

அதன் பின்னர் நிதி மூலம் பெறப்பட்டு யாழ். மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு குறித்த நிவாரண உதவிகள் கட்டம் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் 1,670 குடும்பங்கள் யாழ். மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படுத்தலில் இருக்கின்றன என தெரிவித்துள்ளார்.