யாழ். மாவட்டத்தில் கொரோனா அவசர நிலை ஏற்படும் போது வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லூரியை பயன்படுத்துவதற்காக கல்லூரி நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி கையகப்படுத்தவுள்ளதாக யாழ். மாவட்ட கொரோனா ஒருங்கிணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி தலைமையில் இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் கொரோனா தடுப்பு தொடர்பில் ஆராயும் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இடம்பெற்றது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,
ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது யாழ். மாவட்டத்தில் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலம் தொடர்ச்சியாக தற்போதுள்ள நிலைமையினை பேண முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தாக்கம் காரணமாக தற்போது யாழ். மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள சந்தைகளை மீளத் திறப்பது சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை மத்திய சுகாதார அமைச்சின் அனுமதியுடன் நடத்துவதா இல்லையா என தீர்மானிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
எனினும் இந்தியா மற்றும் இலங்கை பக்தர்கள் கலந்து கொள்ளும் குறித்த நிகழ்வு சம்பந்தமாக முடிவெடுக்க முடியாத நிலை காரணமாக அதனை மத்திய அரசின் அனுமதியோடு நடத்துவது பற்றி தீர்மானிக்கப்படவுள்ளது.
இந்த குழுக்கூட்டத்தில், யாழ். மாவட்ட அரசாாங்க அதிபர், கட்டளைத் தளபதி, வடக்குமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.