யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரையிலும் போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவரையும், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவரையும் அழைத்து கலந்துரையாடியுள்ளார்.
இக்கலந்துரையாடலின்போது மாணவர்களது நலன் கருதியும், கொரோனா சூழ்நிலை மற்றும் சமூக இடைவெளி பேணப்பட வேண்டியதன் காரணமாகவும் இந்த போராட்டத்தை இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பாதுகாப்பு அமைச்சினால் உத்தரவிடப்பட்டதற்கு அமைவாக நினைவுத்தூபி உடைக்கப்பட்டதென்றும், அதற்கு பொலிஸார், விசேட அதிரடிப்படை, இராணுவம் என்பன பாதுகாப்பு அமைச்சினால் அமர்த்தப்பட்டுள்ளதால் தன்னால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாதெனவும் பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தை முன்னெடுத்துள்ளவர்களை காணொளியாக பதிவு செய்துள்ளதுடன், இவ்வாறு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்களை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளனர்.
இருப்பினும் தங்களுக்கான நீதி கோரி இன்னொரு நாள் இந்த போராட்டத்தை அமைதியான முறையில் தங்கள் முன்னெடுப்பதாகவும் மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் தெரிவித்துள்ளனர்.