கிண்ணியாவில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்
38Shares

திருகோணமலை-கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கிண்ணியா-ஹிஜ்ரா வீதியில் வசித்துவரும் மூன்று பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிண்ணியா பகுதியைச் சேர்ந்த சிறுநீரக நோயாளியொருவர் இரத்தம் மாற்றுவதற்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வருகை தந்த போது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட வேளையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருடன் நேரடியாக தொடர்பு வைத்திருந்த நபர்களை சோதனையிட்ட போது அதில் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திருகோணமலை தனிமைப்படுத்தும் முகாமில் 23 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருந்ததாகவும், அவர்களுக்கு கடந்த 4ஆம் திகதி பி.சி .ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று உத்தியோகபூர்வ அறிக்கை கிடைத்துள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள்பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.