மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 தினங்களுக்கு வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு! மாவட்ட அரசாங்க அதிபர்

Report Print Saravanan in சமூகம்
106Shares

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதிவரை 4 தினங்களுக்கு அத்தியாவசிய தேவைகளான மருந்தகங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்கள், பொதுச்சந்தைகள், உணவகங்கள், பேக்கரிகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களை பூட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 25 பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளைய தினம் திறக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட அரசாங்க காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட கொரோனா செயலணிக் கூட்டத்தில் எடுக்கப்படட தீர்மானங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு அறிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாளை அகில இலங்கை ரீதியாக பாடசாலைகள் திறப்பது சம்பந்தமாக ஏற்கனவே கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதனை எவ்வாறு கையாள்வது தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் உட்பட வலயக்கல்வி பணிப்பாளர்களை அழைத்து கலந்துரையாடிய போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 25 பாடசாலைகளை தவிர ஏனைய அனைத்து பாடசாலைகளும் நாளை கல்வி நடவடிக்கைகளுக்கு திறக்கப்படும்.

அதேவேளை சில பாடசாலைகளில் இடவசதிக்கு ஏற்ப அப்பகுதி சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அந்த வலயக்கல்வி பணிப்பாளர்கள் வகுப்புக்களை எவவாறு நடத்துவது என தீர்மானத்தை எடுத்து செயற்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரம் பொங்கல் வாரமாக இருப்பதால் கடைகளில் அதிகமாக பொது மக்கள் கூடுவதால் கொரோனா தொற்று ஏற்பட அதிகமான வாய்ப்புக்கள் இருக்கின்றது.

இதனடிப்படையில் இன்றிலிருந்து எதிர்வரும் 14ஆம் திகதி வரை மருந்தகங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்கள், பொதுச்சந்தைகள், உணவகங்கள், பேக்கரிகள் ஆகிவற்றை தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களை மூடுவதாகவும், உணவகங்களில் இருந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் எடுத்துச் செல்ல மட்டும் அனுமதி வழங்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.