வவுனியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்கானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Report Print Theesan in சமூகம்
139Shares

வவுனியா - பட்டாணிச்சூரை சேர்ந்த 7 பேர் உட்பட ஒன்பது பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பட்டாணிசூர் பகுதியில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் பட்டாணிச்சூர் கிராமம் கடந்த ஒருவாரமாக முடக்கப்பட்டிருந்ததுடன் குறித்த நபர்களுடன் தொடர்புகளை பேணிய பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை வவுனியா பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 146 பேரில் நேற்று முன் தினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 100 பேருக்கு தொற்றில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் அவர்களில் 40 பேரின் முடிவுகள் மீளவும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவர்களில் பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவரது மாதிரி மீளவும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா நகர வியாபார நிலையங்களில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 106 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில் 36 பேரது மாதிரிகள் மீளவும் பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளன.

இதேவேளை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மொத்தமாக 9 பேருக்கு இன்றைய தினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஒரு வாரத்தில் வவுனியாவின் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.