மட்டக்களப்பில் கட்சிகளில் சேர்க்கப்பட்டதா மாடுகள்? காப்பாற்றுவது யார்? தலைவர்கள் மாயம்

Report Print Dias Dias in சமூகம்
275Shares

மூன்று தசாப்தங்களாக மாடுகளை மேய்த்து எமக்காகப் பால், தயிர், நெய் என வாய்க்கு ருசியாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைத் தரும் மட்டக்களப்பின் பாரம்பரிய தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் பாராமுகமாக இருப்பது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

அத்துடன் இவர்களின் வாக்குகளைப் பெற்று வங்குரோத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் எங்கே எனவும் வினவியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், நீறு பூத்த நெருப்பாக உருவாக்கப்படும் இன வாத வன்முறைகளுக்காகக் காத்திருக்கிறார்களா இந்த அரசியல்வாதிகள்?

கண்டபடி தமிழ் பண்ணையாளர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள், கடத்திச் சென்று சித்திரவதை செய்கிறார்கள். ஆனால் கண்டும் காணாமலும் செல்கிறார்கள் எமது அரசியல் வாதிகள்.

இனவாதத்திற்குத் தூபம் காட்டும் அரசியல் தலைவர்களே தமிழ் பண்ணையாளர்களின் உயிர்கள் பறிக்கப்படும் வரை வேடிக்கை பார்ப்பதுதான் உங்கள் அரசியல் நாகரிகம்.

இன்னும் எத்தனை காலத்திற்குப் போராடுவது அந்த பண்ணையாளர்கள். யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்ட போது எல்லோரும் தமிழர்களாய் துடித்தோம், துள்ளி எழுந்தோம், வெற்றியும் கண்டோம்.

ஆனால் கிழக்கில் தமிழர்களைக் கடத்துகிறார்கள், சித்திரவதை செய்கிறார்கள், தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிறார்கள். ஆனால் யாருக்கும் துடித்ததாகத் தெரியவில்லை.

கிழக்கில் உள்ள தமிழர்கள் என்ன அடிமாடுகளா? ஏன் அவர்களுக்கு உணர்வுகளில்லையா? இந்த பண்ணையாளர்களுக்காக மட்டக்களப்பில் உள்ள ஒரு சிலரைத் தவிர ஏனைய தமிழர்கள் ஏன் குரல் கொடுக்க வில்லை.

இவர்களின் பிரச்சினை அப்படி என்ன தீர்க்க முடியாத பிரச்சினைகளா? இல்லையே அப்படி என்றால் ஏன் மட்டக்களப்பு தமிழன் மீது மட்டும் கை வைக்க முடிகிறது.

அதிகாரமற்ற தமிழ்ச் சமூகமாகவா மட்டக்களப்பு தமிழர்கள் இருக்கிறார்கள். பாவம் எங்கள் மாடுகள், அவற்றுக்கு வாக்குகள் இல்லை. ஆனால் அவற்றைப் பராமரிக்கும் பண்ணையாளர்களிடமும் பெரும் தொகை வாக்குகள் இல்லை அதனால் தான் அவர்கள் நாதியற்றவர்களாக அடி வாங்குகின்றனர்.

பாவம் மட்டக்களப்பு சமூகம் அவர்கள் தேர்ந்தெடுத்த அரசியல் வாதிகள் மாடுகளையும் கட்சிகளில் சேர்த்து விட்டனர். அதனால் தான் மாடுகள் கறக்கும் பாலில் கூட கட்சி பேதம் பார்க்கின்றனர்.

சில அரசியல் தலைவர்கள் அது சாணக்கியனின் மாடுகள், என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து விட்டதாகக் கூறி ஒதுங்கிக் கொண்டார்களாம். இதனால் தொடர்ந்து பண்ணையாளர்கள் தாக்கப்படுகிறார்களாம்.

மாடுகளுக்குள் மட்டுமல்ல மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் மக்கள் பிரச்சினைகள் அனைத்திலும் அரசியல் பாகுபாடு பார்க்கின்றனர்.

மிகக் கேவலம் நிறைந்த அரசியல் கலாச்சாரம் கட்டி எழுப்பப்படுகிறது. இதனால் மட்டக்களப்பு சமூகம் இன்னும் இன்னும் பின்னோக்கியே செல்லப்போகிறது.

கடத்தப்பட்டு பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகக் கூறி நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஆறு பண்ணையாளர்களும் மிக மோசமான சித்திரவதைக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் மாவடி வேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் குறித்து தமிழர்கள் ஏன் கவனம் செலுத்தவில்லை. இவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாது இவர்களைப் பலி கொடுக்க தயாராகி வருகிறார்களா? மட்டக்களப்பு அரசியல்வாதிகள்.

ஏன் இந்த பண்ணையாளர்களுக்காகப் போட்டி போட்டுக் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட அரசியல் வாதிகளால் செயற்பட முடியவில்லை? அனைத்து தமிழர்களும் இவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.

இவர்களுக்காகப் போராடவேண்டும். தீர்வு வரும் வரை போராட வேண்டும். ஆயிரம் பேர் இறங்கினால்தான் அரசியல்வாதிகள் நான் முந்தி, நீ முந்தி என்று வருவார்கள்.

அந்த சூழ்நிலை உருவாகும் வரை பண்ணையாளர்களுக்காகத் தமிழர்கள் அனைவரும் குரல் கொடுப்போம்.

தொடர்புடைய செய்தி


01.மட்டக்களப்பில் சிங்களவர்களால் கடத்தப்பட்ட 6 தமிழர்களும் வைத்தியசாலையில்