மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 21 சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலா ரஞ்சனி கணேஷ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அட்டானைச்சேனை, அக்கரைப்பற்று, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, உகன ஆகிய ஆறு வலயங்கள் சிவப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் கொரோனா தொற்றுள்ள நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.
இதுவரை 425 தொற்றாளர்கள் சந்தேகத்தில் அனுமதிக்கப்படடதில் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 3 இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

அத்துடன் இன்று 10 கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வைத்தியசாலையில் கடமையாற்றும் 21 ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஊழியர்களுக்கு தொற்று ஏற்படும் போது வைத்தியசாலை நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு ஆளணி பற்றாக்குறை ஏற்படலாம்.
இதனை தவிர்ப்பதற்காகவும் நோயாளியில் இருந்து ஊழியர்களுக்கும், ஊழியர்களில் இருந்து நோயாளிகளுக்கும் தொற்று பரவலை தடுப்பதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
அந்தவகையில் ஊழியர்கள் தகுந்து சுகாதார வழிமுறைகளை பின்பற்றி சேவைகளை ஆற்றிவருகின்றனர். அதேவேளை தொற்றா நோயான சக்கரைவியாதி, இதயநோய், சிறுநீரகநோய், புற்றுநோய் மற்றும் வயோதிபர்கள் போன்றோருக்கு இது அதிகூடிய பாதிப்பை ஏற்படுத்துவதால் இவ்வாறானவர்கள் வைத்தியசாலைக்கு கிளினிக் வருவதை தவிர்த்து கிராமசேவகர் ஊடாக தபால் மூலமாக மருந்துக்களை பெற்றுக் கொள்ள முடியும்.
065 3133330, 065 3133331 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு கிளினிக்கிற்கு உரிய மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியும்.
வைத்தியசாலைக்கு அவசியம் ஏற்படும் போது நோயாளிகள் வருவதுடன் முடிந்தளவு தங்களுக்கு அருகாமையிலுள்ள வைத்திசாலைக்கு சென்று சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
அதேவேளை நோயாளர்களை பார்வையிட ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதும் தற்போது உள்ள நிலமை காரணமாக நோயாளர்களை பார்வையிடும் நேரத்தை குறைத்து 15 நிமிடம் வரை பார்வையிட்டு செல்வது சிறப்பானதாகும்.
நோயாளிகளுக்கு உதவியாக வருபவர்கள் தேவை ஏற்படும் போது மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இருந்தும் நோயாளிக்கோ, பொதுமக்களுகோ தேவையான அவசியமான தேவைகளை நாங்கள் வழங்கிவருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.