வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணாணை, மயிலந்தனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 13 சந்தேக நபர்களும், 13 வாகனங்களும் இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணாணை, மயிலந்தனை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக வாழைச்சேனை விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் சிக்கியுள்ளனர்.
இதன்போது மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 10 உழவு இயந்திரங்கள் மற்றும் 3 கனரக வாகனங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்தோடு நீண்ட காலங்களுக்கு பிறகு அதிக வாகனங்கள் மற்றும் அதிக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.