வவுனியா பாவற்குளத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு!

Report Print Theesan in சமூகம்
56Shares

வவுனியாவில் பெரிய குளமாகிய பாவற்குளத்தின் வான் கதவுகள் அடைமழை காரணமாக இன்று மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும், பாவற்குளம், ஈரப்பெரியகுளம், முகத்தான்குளம், மருதமடுக்குளம், ராஜேந்திரன்குளம் மற்றும் கல்லாறு அணைக்கட்டு ஆகியன வவுனியாவில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக வான் பாய்ந்த நிலையில் உள்ளன.

வவுனியா மாவட்டத்தின் பெரிய குளமாகிய பாவற்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்த காரணத்தால், மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர்களாகிய குமாரசாமி, கெ.இமாசலன் மற்றும் பிரிவு உதவியாளர் க.கஜமுகதாஸ் ஆகியோரின் தலைமையில் இன்று குளத்தின் மூன்று வான் கதவுகளும் ஒரு அடி திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் மாவட்ட பொறியியலாளர் கெ.இமாசலன்,

வவுனியாவில் தொடர்ச்சியாக அடைமழை பெய்துவரும் நிலையில் பாவற்குளத்தின் நீர்மட்டம் அதிகரித்தால் மீண்டும் வான் கதவுகள் மேலதிகமாக திறக்கப்படும்.

அதன் காரணமாகத் தாழ் நிலங்களில் குடியிருக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன், அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்ததுடன், மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊழியர்கள் காலநிலை மாற்றத்திற்கமைய சேவையாற்றத் தயாராய் இருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.