பாவற்குளத்தின் மூன்று வான்கதவுகள் மீண்டும் திறப்பு

Report Print Theesan in சமூகம்
52Shares

வவுனியா பாவற்குளம் நீர்வரத்து அதிகரித்த காரணத்தினால் இன்று மேலும் அரை அடி உயரத்திற்கு மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் செட்டிகுளம் செல்பவர்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறு மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதேச பொறியியலாளர் கு.இமாசலன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களும் வான்பாய்ந்து கொண்டிருக்கும் நிலையில், நேற்றைய தினம் வவுனியா பாவற்குளத்தின் வான்கதவுகள் ஒரு அடி திறக்கப்பட்டிருந்த நிலையில், தொடர் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதனால் மீண்டும் இன்று அரை அடி வான்கதவுகள் உயர்த்தப்பட்டது.

பாவற்குளத்தின் மூன்று வான்கதவுகள் ஒன்றரையடி திறக்கப்பட்டுள்ள நிலையில் குளத்திலிருந்து தண்ணீர் வேகமாக வெளியேறி வருகின்றது.

இதன் காரணமாக வவுனியாவிலிருந்து நெளுக்குளம்,நேரியகுளம் ஊடாக செட்டிக்குளம் செல்லும் வீதியை ஊடறுத்து தண்ணீர் பாய்வதால் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதுடன், செட்டிக்குளம் செல்பவர்கள் பூவரசங்குளம் ஊடாகச் செல்லும் வீதியை பயன்படுத்துமாறும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பாவற்குளத்தின் தாழ்நில பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.