தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த பெருமளவான கஞ்சா பறிமுதல்!

Report Print Ashik in சமூகம்

சமீப காலமாக தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்குக் கடல் அட்டை, கடல் பல்லி, கஞ்சா, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் அதிகமாகக் கடத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தடுக்க இந்திய, இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இந்தியக் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தனுஸ்கோடி கடற்கரை வழியாக இலங்கைக்குச் சட்ட விரோதமாகக் கஞ்சா கடத்த இருப்பதாக மண்டபம் கடலோர காவல் படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தனுஸ்கோடி அருகே உள்ள மூன்றாம் தீடையில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் 2 மூட்டைகளில் சுமார் 150 கிலோ கஞ்சா கடற்கரை ஓரத்தில் கரை ஒதுங்கி இருந்து, இதனைக் கண்ட இந்தியக் கடலோர காவல் படையினரால் கஞ்சா மூட்டைகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த கடத்தல் சம்பவத்தின் போது இலங்கையைச் சேர்ந்த நபர்கள் யாரும் தனுஸ்கோடி பகுதியில் மறைந்துள்ளார்களா? அல்லது தமிழகத்தைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் கடலோர காவல் படை வீரர்களைக் கண்டதும் தீவுகளில் மறைந்து கொண்டார்களா? என்பது குறித்துக் கரை ஓரங்களிலும் தீவு பகுதிகளிலும் கடற்படை மற்றும் மெரைன் காவல்துறை தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து மீட்கப்பட்ட கஞ்சா மூட்டைகளை மண்டபத்தில் உள்ள கடற்படை முகாமிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

மேலும் ராமேஸ்வரம் உளவுத்துறை அதிகாரிகட்குக் கிடைத்த தகவலையடுத்து தனுஸ்கோடி பகுதியில் 2 மூட்டைகளில் சுமார் 60 கிலோ கஞ்சாவை மீட்டுச் செய்து தனுஸ்கோடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மீட்கப்பட்ட கஞ்சா ராமேஸ்வரம் சுங்கத் துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகக் கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 210 கிலோ மொத்த கஞ்சாவின் இலங்கை மதிப்பு சுமார் 31இலட்சம் ரூபாய் இருக்கும் எனக் கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா குறித்து உளவுத்துறை அதிகாரிகள் ராமேஸ்வரம் அடுத்த தனுஸ்கோடி, அரிச்சல்முனை, மூன்றாம் சத்திரம், வேதாளை, தோப்புக்காடு கிராமங்களில் உள்ள மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.