ஒற்றுமைக்கான வாசல்கள் திறக்கட்டும்! சசிகலா ரவிராஜ் தைத்திருநாள் வாழ்த்து

Report Print Dias Dias in சமூகம்

இன்று தைப்பொங்கலைக் கொண்டாடும் தமிழ் மக்கள் யாவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என திருமதி சசிகலா ரவிரச் அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

சங்ககாலத்தில் பொங்கல் நாளை அறுவடை விழாவாகவே தமிழர்கள் கொண்டாடிவந்துள்ளனர் என்பதனை சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றின் 22ஆம் பாடல் விளக்குகிறது.

அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம்போல….நெல் விதைத்து அறுவடைக்காகக் காத்திருக்கும் எம் விவசாயப் பெருமக்கள் நல்விளைச்சல் காண்பதற்கும், இயற்கை அவர்களுக்குச் சாதகமாக அமையவும், எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

கடந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து உலகெங்கும் பரவ ஆரம்பித்திருக்கும் கொரோனா நோய்த் தொற்றானது வாழ்தலின் வலியையும் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் எமக்கு உணர்த்தியிருக்கிறது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம் ஆன்றோர்கள் கூறுவார்கள். அவ்வாறே தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நாட்களில் தெரிந்த ஒற்றுமை எனும் ஒளிக்கீற்று இன்று ஒரு விடிவெள்ளியாக வளர்ந்து பரிணமித்திருக்கிறது.

தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் உருவாகிவரும் புரிந்துணர்வு மற்றும் விட்டுக்கொடுப்புகள் இதை எமக்கு பிரதிபலிக்கின்றன.

மாற்றமடைந்து வரும் உலக அரசியலும், இறுக்கமடைந்து வரும் உள் நாட்டு அரசியலும், நம் மத்தியில் உறுதியாகக் கட்டியெழுப்பப்பட வேண்டிய ஒற்றுமையின் அவசியத்தை எமக்கு வலியுறுத்துகின்றன.

தமிழ்த் தேசிய கட்சிகள் கூட்டாக இணைந்து ஜெனிவா பிரேரணையை முன் நோக்கிநகர்த்துவதற்காக ஓர் அணியில் செயற்பட ஆரம்பித்திருப்பது, விரக்தியுற்றிருந்த மக்கள் மத்தியில், ஓர் நம்பிக்கையைத் தோற்றுவித்திருக்கிறது.

அத்தோடு புலம்பெயர் உறவுகளின் ஆலோசனைகளும் ஆதரவுக் கரங்களும் தளர்ந்து போன எம் மக்களைத் தைரியப்படுத்துகின்றன.

கட்சிகள் தமக்குள்ளே ஒற்றுமையைப் பேணும் அதேவேளை தமக்கிடையேயும் ஒற்றுமையைப்பேண வேண்டும்.

கொள்கை ரீதியாக, கருத்தியல் ரீதியாக வேற்றுமைகள் கட்சிகளுக்கிடையே காணப்பட்டாலும் மக்களின் நலன் கருதி, மக்களின் அபிலாஷைகளை அடைவதற்காகத் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டியது இன்றைய காலத்தின் முக்கிய தேவையாக உள்ளது.

இனி வரும் காலங்களில் நாடாளுமன்றங்களில் குரல் கொடுக்கும் எமது தமிழ்த்தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற அமர்வுகளுக்கு முன்பாக தமக்கிடையே கலந்துரையாடல்களை மேற்கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, நாடாளுமன்றத்தில் ஒத்த குரல்களாக ஓங்கி ஒலிக்க இதயப் பூர்வமாக வாழ்த்துகிறேன்.

தை பிறந்திருக்கிறது, வழி பிறக்கட்டும்!

ஒற்றுமைக்கான வாசல்களும் திறக்கட்டும்!!