தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று காலை ஆலயங்களில் பொங்கல் பொங்கப்பட்டு விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் நிகழ்வும் பூஜையும் நடைபெற்றது.
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் ஆலய வண்ணக்கர்மார்களுடன் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தில் மாமாங்கேஸ்வரருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று ஆலய முன்றலில் பொங்கல் பொங்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டன.
அதனை தொடர்ந்து ஆலயத்தில் மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் சுகாதார வழிமுறைகளுடன் இம்முறை ஆலயத்தில் தைப்பொங்கல் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, வாழைச்சேனை, கல்குடா, வாகரை, கிரான் உட்பட்ட பல பகுதிகளில் இந்து மக்கள் அதிகாலையில் சூரிய உதயத்தின் போது சூரிய பகவானுக்கு கும்பம் வைத்து பொங்கல் பொங்கி இறை வழிபாட்டில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.