கொரோனா தகவல்களை பொது மக்களுக்கு வழங்கும் பொறிமுறை! அரசாங்கம் தவறிழைத்தது எங்கே?

Report Print Gokulan Gokulan in சமூகம்
167Shares

“எனக்கு தலைசுத்துவதுபோல இருக்கு சத்தி வருது. ஒருவரும் கிட்டவரவேண்டாம்" என பதகளிப்புடன் என் நண்பன் ஒருவன் கூறிக்கொண்டே அலுவலகத்தின் வெளியே போய் தலையை பிடித்துக்கொண்டு இருந்தான். அப்போது தான் அந்த செய்தியை அவதானித்தேன்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளாரா என்பது தொடர்பில் ஆராய்வதாக தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

என் நண்பனும் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டவர்களில் ஒருவன். இந்தச் செய்தி அவனை மட்டுமல்ல அவனுடன் பழகிய ஏனைய ஊடகவியலாளர்களையும் பதகளிப்பில் ஆழ்தியது என்கிறார் கட்டுரையாளர் ச.பார்தீபன்.

அவரது கட்டுரையில் மேலும்,

"தொற்று உறுதிப்படுத்தவில்லைத்தானே... ஏன் பயப்படுகிறாய் என நண்பனை தேற்றினோம். ஆனாலும் அவன் "இருந்தால்.." என்றான். அவன் வீட்டுக்கு போகவும் விரும்பவில்லை.

அலுவலகத்திற்கு உள்ளேயும் வரவில்லை. அடுத்து என்ன செய்வது.. ஊடகவியலாளர்களாகிய எமக்கே தடுமாற்றமாக இருந்தது. ஆனாலும் நிதானமாக சிந்தித்து அவரை தேற்றினோம். மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டதை அருகில் இருந்த என்னால் உணர முடிந்தது. இதற்கு என்ன காரணம்?

இலங்கையில் கொரோனா நோய் பரவ ஆரம்பித்து ஒரு வருடத்தை நெருங்கும் நிலையிலும், பொதுமக்கள் நோய்த் தொற்று குறித்த சரியான விஞ்ஞான ரீதியான தெளிவினை பெற்றுக்கொண்டுள்ளார்களா? சுகாதார வழிகாட்டல்கள் குறித்து அறிந்துள்ளார்களா? நோய் அறிகுறிகள் தொடர்பில் தெரிந்து கொண்டுள்ளார்களா? என பல கேள்விகள் எழுகின்றன.

உண்மையில் கொரோனா ஒரு தொற்று நோய் மாத்திரமல்ல, “மனநோயும்கூட”. கொரோனா எனப்படுவது குணப்படுத்த முடியாத நோய், தொற்று ஏற்பட்டாலே இறந்து விடுவோம் என்ற மிகப்பெரிய அச்சமும், மனக் குழப்பமும் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

எனது நண்பனின் சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்களின் பின்னர் குறித்த ஊடகவியலாளருக்கு கொரோனா இல்லை என்ற செய்தியும் வந்தது.

அது எல்லோரையும் சமாதானப்படுத்தும் செய்தியாக அமைந்ததே தவிர, தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் ஊடகவியலார்களுக்குக் கூட ஏற்பட்ட ஒருவித அச்சத்தை போக்கவில்லை. அவ்வாறெனின் சாதாரண மக்களின் நிலை?

"கொரோனா தொற்று ஆரம்பித்த கடந்த வருட ஆரம்பத்தில் செய்திகளை எவ்வாறு வெளியிட வேண்டும் என்ற சில பரிந்துரைகள் அல்லது விதிமுறைகளை அரசாங்கம் வழங்கியது உண்மைதான். குறிப்பாக கொரோனா தொற்றாளர்களின் விபரங்களை வெளியிடக்கூடாது, தொற்றாளரின் முகத்தை காட்டக்கூடாது போன்ற சில நியாயமான விதிகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது வரவேற்கத்தக்கது. எனினும் ஊடகவியலாளர்களுக்கு தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வு செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்வில்லை." என்ற குற்றச்சாட்டை ஊடகவியலாளர் சமில்க பண்டார முன்வைத்தார்.

பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக கொரோன சம்பந்தப்பட்ட செய்திகளை நேரடியாகச் சொன்று திரட்டும் நிலையில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு சுகாதார நடைமுறைகள் தொடர்பிலான பொதுவான அறிவித்தல்கள் வழங்கப்பட்டதே தவிர செயலமர்வினூடாக ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் செயற்பாட்டை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

அவ்வாறு செய்திருந்தால், கொரோனா தொற்று அச்சத்தால் ஊடகவியலாளர்கள் பலர் மனதளவில் பாதிப்படைய மாட்டார்கள். தற்போது ஊடகவியலாளர்கள் சுயமாகவே சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அறிக்கையிடலில் ஈடுபடுகின்றார்கள்.” என அவர் குறிப்பிடுகின்றார்.

அதே நேரம் “கொரோனா தொற்று குறித்த பல செயற்பாடுகளில் துறைசார்ந்த நிபுணர்களை நியமிக்கப்படவில்லை. இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு சரியான திட்டமிடல் இல்லை. விசேடமாக இந்த விடயத்துடன் தொடர்புடையவர்கள் இதற்கு தகுதியானவர்கள் நியமிக்கப்படுவதில்லை” என மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சுதேஷ் நந்திமால் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளுக்கு அமைய மக்களுக்கு சரியான தகவல்கள், சுகாதார வழிகாட்டல்களை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியபோதிலும், அது தொடர்பில் ஒரு வருடத்தின் பின்னரும் அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை என அரச தாதியர் சங்கம் தெரிவிக்கின்றது.

“உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை பின்பற்றுமாறு நாம் பல தடவைகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தோம். எனினும் அதனை செவிமடுக்கவில்லை. இராணுவத்தைக் கொண்டு தொற்றை ஒழிக்க முடியாது. இது யுத்தமல்ல. அங்கேயே அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது.” என அரசாங்கம் பொறுப்பற்று செயற்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றார் அரச தாதிய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய.

இது ஒருபுறம் இருக்க பெருந்தொற்றுநோய் ஒன்றை எதிர்கொள்ளும்போது ஒழுங்கமைக்கப்படாத பொறிமுறைகள் இல்லாத வகையில் அரசு செயற்படுவது குறிந்தும் சுட்டிக்காட்டுகிறார் சமில்க பண்டார.

“தொலைக்காட்சிகள், வானொலிகளில் சுகாதாரத் தரப்பால் அங்கீகாரம் வழங்கப்படாத சுதேச கொரோனா ஒளடதங்கள் தொடர்பிலான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. அதனை ஏற்றே ஆகவேண்டும். அதற்குக் காரணம், கொரோனா தொடர்பிலான செய்திகளில் எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற விடயத்தில் அரசாங்கத்தின் பரிந்துரைகளோ, விதிமுறைகளோ இல்லை.” என்கிறார்.

திடீரென வரும் கொரோனா ஊரடங்கு அல்லது தனிமைப்படுத்தல் அறிவிப்புகள் மக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்குவதாகவும் சமன் ரத்னப்பிரிய தெரிவிக்கின்றார்.

“கொரோனா ஊரடங்கை திடீரென அறிவிப்பதால் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இதற்கென சரியான திட்டமிடல்கள் இல்லை. கம்பஹாவில் மூன்று நாட்கள் எனக் கூறிவிட்டு 10 நாட்களுக்கு ஊரடங்கை நீடித்தார்கள். ஆகவே மக்கள் எவ்வாறு தயாராவார்கள்? இலட்சக்கணக்கான தினக் கூலிகளின் நிலைமைத் தொடர்பில் அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன? 5,000 ரூபாயும் எங்காவது சரியாக வழங்கப்பட்டதா? தொடர்மாடிக் குடியிருப்புகளை 80 நாட்களுக்கு மேலாக மூடி வைக்கின்றனர். அங்கு வாழும் மக்களின் நிலைமை? திட்டமிடல் என்பது இங்கு இல்லை” என அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய குற்றஞ்சாட்டுகின்றார்.

ஆனால் அரசு சரியான வழியில்தான் செல்கிறது என்பது இராணுவ ஊடகப்பேச்சாளர் கருத்தாக உள்ளது.

“ஒவ்வொரு நாளும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளிலான சுமார் 200 பத்திரிகைகள் (தேசிய, பிராந்திய) இலங்கையில் வெளியாகின்றன. அவை அனைத்திலும் கொரோனா தொற்றுத் தொடர்பிலான தகவல்கள் வெளியாகின்றன. அதனைவிட தொலைக்காட்சிகள், வானொலிகளில் கொரோனா தொற்றை தடுப்பது, சுகாதார நடைமுறைகள் தொடர்பிலான தகவல்கள் ஒளி/ஒலிபரப்பாகின்றன.” என இராணுவ ஊடகப் பேச்சாளர் சந்தன விக்ரமரத்ன தமது தரப்பு நியாயத்தை முன்வைக்கின்றார்.

இதேவேளை, மக்களை தெளிவுபடுத்தும் பணியை சிறப்பாக மேற்கொள்வதாகவும் அதுவே எமது கடமை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் தெரிவிக்கின்றது.

“இந்த நோய் எதனை நோக்கி செல்கிறது என்பது தொடர்பிலான தகவல்களை வழங்குவதே எமது கடமை. அரசியல் தலைமைகளுக்கு நாம் தொழிநுட்ப ரீதியான தகவல்களை வழங்கி, அதன் ஊடாக எடுக்கப்படும் சரியான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக அழுத்தம் கொடுப்பதே எமது பணி. இந்த அழுத்தத்தின் ஊடக இந்த நோயிலிருந்து மீண்டெழுவதற்கான தகவல்களை பொது மக்களுக்கு வழங்குவதையும் நாம் மேற்கொள்கின்றோம். எங்களது விசேட வைத்தியர்களை உள்ளடக்கிய குழு சுகாதார அமைச்சுடன் இணைந்து பணியாற்றுகின்றது. நாட்டை எதனை நோக்கி வழிநடத்த வேண்டுமென விசேட வைத்தியர்கள் இணைந்து தீர்மானிக்கின்றார்கள். அது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.” என தமது சங்கத்தின் பொறுப்பை விபரிக்கின்றார் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின், உதவிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவிக்கின்றார்.

இதேவேளை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொரோனா விழிப்புணர்வு தகவல்கள் மற்றும் செய்திகளில் சரியாக வழங்கப்படுவதாகவும் எனினும் மொழிப் பெயர்ப்பில் ஏற்படும் தாமதமே காரணமாகவே தமிழ் மற்றும் சிங்கள மொழியில் அறிவித்தல்களை வழங்குவதில் காலத்தாமதம் ஏற்படுவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

“சிங்கள மொழியில் நாம் தகவலை வெளியிட்டதன் பின்னர், ஒரு சில நிமிடங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பெயர்ப்பை வெளியிடுவோம். மொழி பெயர்ப்பில் ஏற்படும் தாமதமே இதற்குக் காரணம்” என தகவல் திணைக்களத்தின் தகவல் பணிப்பாளர் எம்.ஜி ஜயதிஸ்ஸ தெரிவிக்கின்றார்.

கொரோனா தொற்று குறித்த தகவல்களை பொது மக்களுக்கு வழங்கும் செயற்பாடுகளை பல்வேறு தரப்பினர் ஊடகங்கள், ஒலிப்பெருக்கியூடான அறிவித்தல், துண்டுபிரசுரங்கள் மற்றும் நேரடியான அறிவுறுத்தல்கள் என பல வடிவங்களில் மேற்கொள்கின்றனர். எனினும் அவை மக்களை சரியாக சென்றடைகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

குறிப்பாக நகர் புற மக்களுக்கு இதுத் தொடர்பில் ஓரளவு தெளிவு காணப்படுவதை மறுப்பதற்கில்லை, காரணம் அவர்களுக்கு தனியார் வைத்தியசாலைகள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ செயற்பாட்டாளர்கள் ஊடாகவும் சில தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கின்றது.

அதனைவிட இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் சில தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. எனினும் கிராமப்புற மக்களின் நிலைமை? அவர்களுக்கு தொலைக்காட்சி மற்றும் வானொலியே பிரதான தகவல் மூலங்கள்.

“கொரோனா தொற்று குறித்த செய்திகளுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான சுகாதார நடைமுறைகள் குறித்த தகவல்களை வழங்குவதற்கு வானொலிகள், தொலைக்காட்சிகள் வழங்குவதில்லை” என்கிறார் வானொலி ஒன்றில் செய்தி ஆசிரியராக கடமையாற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர்.

மேலும் “கிருமி நீக்கி” (sanitizer) திரவ விளம்பரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சுகாதார நடைமுறைகள் குறித்த தகவல் பகிர்விற்கு வழங்கப்படுவதில்லை” எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இதுவொருபுறமிருக்க வளர்ச்சியடைந்துள்ள சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளப் பயன்பாடு சரியான தகவல்கள், சரியான மற்றும் தகுதியானவர்கள் ஊடாக மக்களை சென்றடைகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது. இந்த விடயத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் சுட்டிக்காட்டுகின்றது.

“ஊடகங்களும் ஒழுக்க நெறிகளுக்கு உட்பட்டு செயற்பட வேண்டும். தனிநபர்களின் தேவைகளுக்கு அமைய செயற்படக்கூடாது. இதனை அரசாங்கமே ஒழுங்குப்படுத்த வேண்டும். உதாரணமாக ஏதாவது ஒரு ஒளடதம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் இதுத் தொடர்பில் சுகாதாரத் தரப்பின் அறிவுறுத்தல் இன்றி செய்திகளை வெளியிடுவதால் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவார்கள். ஆகவே மக்கள் சுகாதாரத் துறைத் தொடர்பில் தவறாக நினைப்பார்கள்.” என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின், உதவிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவிக்கின்றார்.

வட்ஸ்அப், பேஸ்புக் மெசன்ஜர் உள்ளிட்ட தகவல் பகிர்வு தளங்கள் ஊடாக எந்தளவு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் பகிரப்படுகின்றன என்பதுவும் கேள்விக்குரியே.

இவ்வாறான நிலையில், அரச நிறுவனம் ஒன்றினால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரமே நம்பவேண்டுமெனவும் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவிக்கின்றார்.

இந்நிலையில், பொது மக்கள் பொறுப்பற்று நடந்துகொள்வாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குற்றஞ்சாட்டுகின்றார்.

“கொரோனா தொற்று குறித்து அரசாங்கத்தின் சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும், எனினும் அதனை மக்கள் செய்கின்றார்களா? முகக் கவசம் அணியாத எத்தனைப்பேர் தினமும் கைது செய்யப்படுகின்றார்கள்? சமூக இடைவெளியை கடைப்பிடிக்கக் கோரினால் இதுத் தொடர்பில் எத்தனை பேர் அக்கறைக் காட்டுகின்றனர்” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேள்வி எழுப்புகின்றார்.

பொது மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய அதேநேரம், கொரோனா தொற்று குறித்த சரியான தகவல்களை எங்கு பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பில் சரியான அறிவினைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

“பொது மக்களும் இதில் பங்களிப்பு வழங்க வேண்டும். இணையத்தளங்கள் ஊடாக பரப்பப்படும் தகவல்களை பொதுமக்களும் உறுதிப்படுத்தாமல் நம்புகின்றனர். ஆகவே அனைத்துத் தரப்பினரும் ஏதோ ஒரு வகையில் தவறிழைக்கின்றனர்.” என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின், உதவிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவிக்கின்றார்.

மேலும், “இந்த விடயத்தில் அதிகாரிகள், ஊடகங்களைத் தாண்டி பொதுமக்களின் பொறுப்பு என்ற ஒரு விடயம் காணப்படுகின்றது. பொது மக்கள் தெளிவினைப் பெற்றுக்கொள்வதோடு, தெளிவுபடுத்தல்களை வழங்கவும் வேண்டும். அரச தரப்பில் போதுமான அளவு தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படுகிறது என இராணுவ ஊடகப் பேச்சாளர் சந்தன விக்ரமரத்ன தெரிவிக்கின்றார்.

எவ்வாறெனினும் சுகாதாரப் பணியாளர்களுக்கே சரியான தகவல்கள், சுகாதார வழிகாட்டல்களை வழங்கத் தவறியுள்ள அரசாங்கம் எவ்வாறு பொது மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கப்போகிறது என அரச தாதியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

“மக்களை தெளிவுபடுத்த வேண்டுமெனின் அரசாங்கம் முதலில் தெளிவடைய வேண்டும். கொரோனா ஒரு தொற்றுநோய் என்றாலும், இது புதிதான ஒன்று. எனினும் சுகாதார ஊழியர்களுக்கு முதலில் இதுத் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டிருக்க வேண்டும். எனினும் அதனை அரசாங்கம் செய்யவில்லை. இது முதலாவது தவறு.” என அரச தாதியர் சங்த்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவிக்கின்றார்.

“உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கும் பரிந்துரைகளை அரசங்கமே நிராகரிக்கின்றது. அதனை மீறுகிறது. ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்த சந்தர்ப்பத்தில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா? இல்லைதானே? பிரதமரே சென்று ஜீவன் தொண்டானை கட்டி அணைக்கின்றார். சீனப் பெண் தொற்றிலிருந்து குணமடைந்ததும் சுகாதார அமைச்சர் முத்தமிடுகின்றார். முன்னாள் சுகாதாரப் பணிப்பாளர் முகக்கவசங்களை அணியத் தேவையில்லை எனத் தெரிவித்திருந்தார். இவையெல்லாம் தவறாக முன்னுதாரணங்கள்.” என சமன் ரத்னப்பிரிய குற்றஞ்சாட்டுகின்றார்.

இந்த நிலையில், பொது சுகாதார பரிசோதகர் பணியில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறை மக்களுக்கு கொரோனா தொற்று குறித்த தகவல்கள் மற்றும் சேவைகளை “நேரடியாக” வழங்குவதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவிக்கின்றார்.

“இலங்கையின் 15 தொடக்கம் 20 ஆயிரம் மக்களுக்கு ஒரு பொது சுகாதார பி என்ற அடிப்படையில் பணியாற்றுகின்றோம். உண்மையில் இது மிகவும் சிக்கலுக்குரிய விடயம். மிக வேகமாக பரவக்கூடிய இந்த நோயை தடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க எமக்கு ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்றது. ஓய்வுப்பெற்றவர்களை கூட இணைத்துக்கொண்டு நாம் தற்போது செயற்படுகின்றோம். எனவே 10 ஆயிரம் பேருக்கு ஒரு பரிசோதகர் என்ற அடிப்படையிலாவது பணியாளர்கள் இருந்தால் இலகுவாக அமையும். ஆளணிப் பற்றாக்குறையு பிரதான காரணம்.” என பாலசூரிய தெரிவிக்கின்றார்.

கொரோனா தொற்று ஆரம்பித்து ஒரு வருடத்தை கடந்துள்ள நிலையில், அதுத் தொடர்பிலான தகவல்களை பொது மக்களுக்கு சரியாக வழங்குதல் மற்றும் அரசுடன் தொடர்புடைய ஏனைய தரப்பினரை இணைத்துச் செயற்படுவதில் அரசாங்கம் சில பின்னடைவுகளை சந்தித்துள்ளமை வெளிப்படையான உண்மை.

குறிப்பாக அரச தாதியர் சங்கத்தின் பரிந்துரைகளை அரசாங்கம் கவனத்திற்கொள்ளவில்லை, சுகாதார ஊழியர்களுக்கு உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளையேனும் வழங்க அரசாங்கம் தவறியுள்ளது.

மேலும், கொரோனா குறித்த சரியான தகவல்களை வெகுஜன ஊடகங்கள் பொது மக்களுக்கு வழங்குவதற்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டிய அரசாங்கம், மாறாக தவறான முன்னுதாரணங்களை வழங்கியுள்ளதோடு, அதற்கு அரசத் தலைவர்களும் உடந்தையாக காணப்பட்டுள்ளார்கள் என்பது அரச தாதியர் சங்கத்தின் கருத்து.

அதேவேளை, ஊடகங்களுக்கு சரியான தகவல்களை வழங்கி, அதனை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை, அவ்வாறு எடுத்திருந்தால் கேகாலையில் தம்மிக்க பண்டார என்ற ஒரு தனிநபரை நேக்கி இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் சென்றிராது.

மேலும், சுகாதாரத் துறை முன்னின்று செயற்பட வேண்டிய சந்தர்ப்பத்தில் பாதுகாப்புத் தரப்பை களமிறக்கியுள்ள அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து தொடர்ச்சியான விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனா தொற்றாளர்களுடன் நேரடியாக பணியாற்றும் முன்களப் பணியாளர்களிடையே முதன்மையானவர்களான பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்பில் அரசாங்கம் சிறிதளவேனும் அவதானம் செலுத்தவில்லை என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த காலத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் கொரோனா தடுப்புப் பணிகளில் இருந்து வெளியேறப்போவதாகவும் அரசாங்கத்தை எச்சரித்திருந்தனர்.

காரணம் அவர்களுக்கு தேவையான அடிப்படை சுகாதார பாதுகாப்பைக்கூட அரசாங்கம் வழங்கியிருக்கவில்லை. இவ்வாறிருக்கையில் தற்போதைய சூழ்நிலையில் ஆளணிப் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் உலகமே விஞ்ஞானத்தை நோக்கி பயனிக்கையில் நாட்டின் சுகாதார அமைச்சர் கொரோனா தொற்று நீங்க பானை ஒன்றை ஆற்றில் போட்டார், பிரதமர் நாடு முழுவதிலும் அமைந்துள்ள வழிபாட்டு இடங்களில் விசேட பூஜைகளை நடத்துமாறு பணிப்புரை விடுத்தார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாகவே ஏதோ ஒருவகை பாணியை பருகினார்கள். இவ்வாறான விடயங்கள் மக்களை தவறான வழிக்கு இட்டுச் செல்லும் என்பதே செயற்பாட்டாளர்களின் கருத்து.

இந்த நிலைமைகள் சீர் செய்யப்பட்டு, அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்துக் கொண்டு, (அரசாங்கம், சுகாதாரத் தரப்பு மற்றும் பாதுகாப்புத் தரப்பு) அவர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து ஓரணியில் பயணித்தாலேயன்றி கொரோனாவை நாட்டிலிருந்து விரட்டுவது என்பது சுலபமான காரியமாக அமையப்போவது இல்லை என்பதே நிதர்சனம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.