கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் செம்மண்ணோடை கிராம உத்தியோகத்தர் வெள்ள நிவாரணப்பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் போது கிராம உத்தியோகத்தரை தாக்கி அவரது அலுவலகத்தைச் சேதப்படுத்திய, சம்மந்தப்பட்ட நபர்கள் அனைவரும் கைது செய்யப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர் எம்.எம்.சாதாத் தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான கிராம உத்தியோகத்தர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கடந்த 11.01.2021ம் திகதி அனுமதிக்கப்பட்டு மறு நாள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் தனது கவலையைக் கிராம உத்தியோகத்தர் எம்.எம்.சாதாத் வெளியிட்டுள்ளார்.
கடந்த 11.01.2021ம் திகதி இரவு கிராம சேவை உத்தியோகஸ்தர் தனது அலுவலகத்தில் வைத்து வெள்ள நிவாரணப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வெள்ளத்தால் பாதிப்படையாத குறித்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் தங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்படவில்லை என்று கூறி கதைத்துக் கொண்டு இருக்கும் போது தன்னைத் தாக்கியதாகக் குறித்த கிராம உத்தியோகத்தர் அன்று இரவே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் ஏழு (07) நபர்கள் சந்தேக நபர்களாக முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இரண்டு சந்தேக நபர்கள் மாத்திரம் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை நீதிமன்றில் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதியும், நீதிவானுமாகிய எச்.எம்.எம்.பஸீல் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது எதிர்வரும் 21.01.2021 வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
செம்மண்ணோடை கிராம உத்தியோகத்தரை தாக்கிய நபர்கள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவது கட்டாயமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று, டெங்கு நுளம்பு பெருக்கத்தின் தாக்கம் மற்றும் வெள்ள அனர்த்தம் போன்ற இன்றைய சூழலில் தங்களது கடமைகளைச் செய்யும் அரச அதிகாரிகளுக்குக் கடமைக்கு இடைஞ்சலாக இருக்கும் நபர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்பதின் மூலம் தான் அரச கடமைக்கு இடையூறு செய்பவர்களைக் குறைக்க முடியும் என்று அரச உத்தியோகத்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.