மன்னார் ஆடை விற்பனை நிலைய ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி

Report Print Ashik in சமூகம்
129Shares

மன்னார் பஸார் பகுதியில் கடந்த புதன் கிழமை வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். பரிசோதனைகளின் போது முதல் கட்டமாக கிடைக்கப் பெற்ற பரிசோதனை அறிக்கையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் றோய் பீரிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் பஸார் பகுதியில் கடந்த புதன் கிழமை காலை வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், வர்த்தக நிலையங்களில் வேலை செய்கின்றவர்கள் அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டு மன்னார் புதிய பேருந்து நிலைய பகுதியில் வைத்து சுகாதார துறையினரினால் பீ.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

முதல் கட்டமாக கிடைக்கப்பெற்ற பரிசோதனை அறிக்கையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

மன்னார் பஸார் பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் கடமையாற்றும் ஒருவருக்கே தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த நபர் தற்போது சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 7 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை குறித்த ஆடை விற்பனை நிலையத்திற்குச் சென்று மிகவும் நெருக்கமாக நடந்து கொண்ட வாடிக்கையாளர்கள், நண்பர்கள் உடனடியாக தமது பிரதேசத்தில் உள்ள பொது சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசோதகர்களை தொடர்பு கொண்டு தங்களின் விபரங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.

தொடர்பு கொண்டு விபரங்களை பதிவு செய்வதன் ஊடாக பீ.சி.ஆர்.பரிசோதனைகளை முன்னெடுக்க முடியும். இதனால் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.