மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதியர்களால் ஒருமணி நேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம்

Report Print Kumar in சமூகம்
144Shares

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களால் ஒருமணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் தாதியர் ஒருவர் கொரொனா நோயாளியாக இனங்காணப்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக காத்தான்குடி வைத்தியசாலையிலுள்ள தாதியர்களுக்கான சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட போது அவரை அனுமதிப்பதற்கு காத்தான்குடி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் மறுப்பு தெரிவித்ததன் காரணமாக அவர் பெரியகல்லாறு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களுக்கு கொரொனா தொற்று ஏற்படுமிடத்து அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே ஒரு இடத்தினை ஒதுக்கி சிகிச்சை வழங்குமாறு வலியுறுத்தியும், கொரோனா சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதியர்களுக்கு விசேட சலுகைகளை வழங்குமாறு வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரச தாதியர் சங்கம், ஐக்கிய தாதியர் ஒன்றியம் என்பன இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன .

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள வைத்தியசாலை நிர்வாக கட்டிடத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய தாதியர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

தமது கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்காவிட்டால் தொடர்ச்சியான பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய நிலையேற்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா பாதிப்புக்குள்ளான தாதி தற்போது கல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பாதிக்கப்படும் தாதியர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான தனிப்பிரிவினை அமைப்பது தொடர்பில் சுகாதார அமைச்சின் அனுமதி இதுவரையில் கிடைக்கவில்லையெனவும் தற்போது பெரிய கல்லாறு வைத்தியசாலையில் சிகிச்சையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கலாரஞ்சனி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா பிரிவில் கடமையாற்றும் தாதியர்களுக்கான விசேட சலுகைகள் கோரப்பட்டுள்ள போதிலும் என்ன சலுகையெனக் குறிப்பிடவில்லை எனவும், அவ்வாறு தேவையான சலுகைகளைக் குறிப்பிடும் போது உரிய திணைக்களத்திற்கு அவை அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.