மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Report Print Ashik in சமூகம்
153Shares

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்றது.

எனவே மக்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுகாதார துறையினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 6 ஆயிரத்து 938 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த பரிசோதனையின் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 84 பேர் கொரோனா தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் தற்போது வரை 54 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.தொற்றாளர்களுடன் தொடர்பு உள்ளவர்களை சுயதனிமைப்படுத்தி அவர்களுக்கானபீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை சுகாதார துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரதேச செயலாளர்கள் தமது பகுதிகளில் சுயதனிமைப்படுத்தப்படுகின்றவர்களுக்கான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (19) காலை மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்தோம். ஜனவரி மாதம் அதிக எண்ணிக்கையான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாளர்களும் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உள்ளனர்.சகல துறையினரையும் உள்ளடக்கி விசேட கூட்டத்தை நாடாத்தி இருந்தோம்.

சுகாதார துறையினர், பாதுகாப்பு தரப்பினர்,அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.குறித்த கலந்துரையாடலின் போது மிகவும் இருக்கமாக சட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனவும், மக்களுக்கான விழிப்புணர்வுகளை வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வர்த்தக நிலையங்கள் கண்கானிக்கப்பட வேண்டும் எனவும், அவர்களுடைய செயல்பாடுகள் , சுகாதார நடை முறைகளை பின்பற்றுதல், மக்களுடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் முறைகள் போன்றவற்றை அவதானித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கி உள்ளோம்.

குறிப்பிட்ட நாட்களில் வர்த்தக நிலையங்களில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் அதிகம் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உள்ளனர்.தற்போதைய சூழ்நிலையில் சுமார் 10 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் வியாபார நிலையங்களில் பணியாற்றுகின்றவர்களுக்கு தொற்று காணப்படுமாக இருந்தால் ஏனைய வியாபார நிலையங்களையும் மூடி அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.அவர்களையும்,மக்களையும் பாதுகாக்க வேண்டும்.

இவ்விடயம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை சுகாதார துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணியாளர்கள்,சுகாதார துறையினர் தொடர்ச்சியாக இரவு பகல் பாராது கொரோனா தொற்றாளர்களுக்காக கடமையாற்றி வருகின்றனர்.

இதனால் வைத்தியசாலை உத்தியோகதர்கள் சிலர் தொற்றிற்கு உள்ளாகி உள்ளனர்.அவர்களின் சேவையை பாராட்டுகின்றேன்.மக்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்களுடன் இணைந்து பாதுகாப்பு தரப்பினர்,திணைக்கள அதிகாரிகள், வைத்தியர்கள் அனைவரும் தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

எனவே அனைவரும் தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்கி மாவட்டத்தில் கொரோன தொற்று இல்லாது செய்ய அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.