அம்பாறை - சம்மாந்துறை பிரதேசத்தில் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக பாடசாலைக்குச் சுகாதார அதிகாரிகள் வருவதாக கிடைத்த வதந்தியையடுத்து பெற்றோர் பாடசாலைகளைப் முற்றுகையிட்டு, பிள்ளைகளைப் பாடசாலைகளிலிருந்து அழைத்து சென்றமையினால் சற்றுநேரம் பதற்ற நிலை நிலவியுள்ளது.
சம்மாந்துறையில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கு இன்று சுகாதார அதிகாரிகள் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப் பாடசாலைகளுக்குச் செல்லவுள்ளதாகப் பெற்றோர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து பெற்றோர்கள் பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களை தாம் அழைத்து செல்வதாக கூறி முரண்பட்டுள்ளதன் காரணமாக அங்கு சற்றுநேரம் பதற்ற நிலை நிலவியுள்ளது.
சம்பவம் தொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த செய்தி உண்மைக்கு புறம்பான வதந்தியென சுகாதார அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெற்றோர்கள் அதிபர்களுடன் முரண்பட்டு கல்வி நடவடிக்கைகளை இடை நிறுத்தி பிள்ளைகளை அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.