வவுனியா பட்டாணிச்சூரின் ஒரு பகுதி மீண்டும் முடக்கம்

Report Print Theesan in சமூகம்
91Shares

வவுனியா பட்டாணிசூர் கிராமத்தின் சில வீதிகள் இன்று(21) மாலை 6 மணியிலிருந்து முடக்கப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிச்சூரை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த கிராமம் கடந்த நான்காம் திகதி முடக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புகளைப் பேணிய பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த கிராமம் முடக்கப்பட்டு 14 நாட்கள் கடந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முற்றாக விடுவிக்கப்பட்டது.

எனினும் கடந்த இரண்டு தினங்களிற்கு முன்பாக வெளியாகியிருந்த பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் குறித்த பகுதியைச் சேர்ந்த 20 பேருக்குத் தொற்றியிருக்கின்றமை மீண்டும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து பட்டாணிச்சூர் கிராமத்தின் 1ம், 2ம், 3ம் ஒழுங்கைகள் இன்று மாலை 6 மணியிலிருந்து முடக்கப்பட்டுத் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்குள் எவரும் நடமாட முடியாதபடி இராணுவம் மற்றும் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.