பொதுச்சுகாதார பரிசோதகர் மீது உமிழ்ந்த நபருக்கு ஆறு வருடம் கடூழிய சிறை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Rakesh in சமூகம்
95Shares

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்காக வந்த பொதுச் சுகாதார பரிசோதகரின் முகத்தில் உமிழ்ந்த நபருக்கு பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தால் ஆறு வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம, அட்டுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அட்டுளுகம பிரதேசத்தில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போது குறித்த நபருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் திகதி அவரைச் சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்காகப் பிரதேசத்துக்குப் பொறுப்பான சுகாதார பரிசோதகர் அந்தப் பிரதேசத்துக்குச் சென்றிருந்தார்.

இவ்வேளையில் தன்னை சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்ல வந்த அதிகாரிக்கு எதிர்ப்பு வெளியிட்ட அந்த நபர், "உங்களுக்கும் கொரோனாவைப் பரப்புகின்றேன்"என்று கூறி சுகாதாரப் பரிசோதகரின் முகத்தை நோக்கி உமிழ்ந்துள்ளார்.

இதையடுத்து அந்த நபருக்கு எதிராக பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இவர் கொரோனா தடுப்புச் சட்டத்திற்கமைய சுகாதார அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தமை, சுகாதார ஒழுங்கு விதிகளை மீறியமை, அரச அதிகாரியின் உத்தரவை மதிக்காமை உள்ளிட்ட எட்டு குற்றச்சாட்டுகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆறு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதிப்பதாக இன்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குற்றவாளி பத்தாயிரம் ரூபா தண்டப்பணத்தைச் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.