கொழும்பிலிருந்து யாழ். சென்ற பயணிகள் பேருந்து காரொன்றுடன் மோதி விபத்து

Report Print Dias Dias in சமூகம்
477Shares

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து காரொன்றின் மீது மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்து பயணிகளை இறக்கிய பின் கோண்டாவில் சாலைக்கு செல்லும்போது, ஆணைப்பந்தியூடாக இலுப்பையடிச் சந்தியை திடீரென கடந்த கார் மீது மோதியுள்ளது.

இந்த சம்பவத்தில் காரில் பயணித்தவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் கார் கடுமையாக சேதமடைந்துள்ளது.

விபத்தில் தொலைபேசி கம்பம், மின்விளக்கு கம்பம் மற்றும் அருகிலிருந்த பேருந்து தரிப்பு நிலையம், ஆடைகள் விற்பனை நிலையத்தின் முகப்பு என்பனவும் சேதமடைந்துள்ளன.

இதனால் ஆடைகள் விற்பனை நிலையத்திற்குள் உறங்கிக் கொண்டிருந்த ஒருவரும் தலையில் கடும் காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை பேருந்து மோதிய காரில் பயணித்தவர்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் இவர்கள் அலுவலக விடயமாக யாழ்ப்பாணத்திற்கு வந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் காயமடைந்த காரில் பயணித்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.