வவுனியா வர்த்தகர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை

Report Print Theesan in சமூகம்
90Shares

வவுனியா மில் வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சேர்ந்த வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று இரண்டாவது நாளாக பெறப்பட்டது.

வவுனியா நகர்பகுதியில் எழுமாறாக நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 55 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகரின் ஒரு பகுதி கடந்த சில நாட்களாக முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளை சேர்ந்த அனைத்து வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்நிலையில் அடுத்த வாரமளவில் நகரத்தில் முடக்கப்பட்ட பகுதிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். அந்தவகையில் இதுவரை பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுக்காத ஊழியர்கள் மற்றும் வர்த்தகர்கள் என சுமார் 600 பேருக்கு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் வைத்து அன்டிஜன் பரிசோதனை நேற்றும் இன்றுமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது. குறித்த நடவடிக்கைகளிற்கு வவுனியா வர்த்தக சங்கமும் தமது ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.